த.வெ.க. அமைச்சரவை விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மோதல்... கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு?
முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அமைச்சரவையில் இடம் பெறுவதில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் அமைச்சரவையில் இணையுவது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது. இதனால் த.வெ.க. கூட்டணிக்குள் புதிய அரசியல் விவாதம் உருவாகியுள்ளது.
தற்போது த.வெ.க. அரசுக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றன.
இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன், எதிர்காலத்தில் த.வெ.க. அமைச்சரவையில் தங்கள் கட்சி இடம்பெறும் சூழல் உருவாகி வருவதாக தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தங்கள் கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் வாய்ப்பும் இருப்பதாக அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: சொத்தை காப்பாற்ற ஆளுங்கட்சிக்கு ஓடினார்கள்! துரோகிகள் சொல்வதை நம்ப வேண்டாம்.. இபிஎஸ் காட்டம்!
மேலும், வரும் உள்ளாட்சி தேர்தலில் த.வெ.க.வுடன் கூட்டணியாக போட்டியிட வேண்டும் என்ற எண்ணமும் இந்திய கம்யூனிஸ்ட் தலைமையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில், கட்சிக்குள் உள்ள சில நிர்வாகிகள் தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், த.வெ.க. அமைச்சரவையில் இணைய மாட்டோம் என்ற முடிவை ஏற்கனவே அறிவித்துள்ளோம் என்றும், அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். வீரபாண்டியன் கூறிய கருத்து குறித்து அவரிடமே கேட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயை சந்தித்த மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், சேலம் குடிநீர் திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் மற்றும் தேனி மாவட்ட மலைவாழ் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனிடையே, வரும் 20-ஆம் தேதி சென்னை நடைபெற உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அமைச்சரவையில் பங்கேற்பது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. இந்த விவகாரம் த.வெ.க. கூட்டணியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திருச்செந்தூர் கோவிலில் கிரில் கேட்..! பக்தர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்... எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அறிவிப்பு..!