×
 

 சி.பி.ஐ. விசாரணை நிறைவு: டெல்லியிலிருந்து சென்னை புறப்பட்டார் விஜய்!

கரூர் விபத்து தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. தலைமையகத்தில் இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சென்னைக்குப் புறப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணைக்காக இன்று இரண்டாவது முறையாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம்குறித்து, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 12-ஆம் தேதி சுமார் 7 மணி நேரம் விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று இரண்டாம் கட்ட விசாரணை நடைபெற்றது.

இன்றைய விசாரணையில், கடந்த முறை கேட்கப்பட்ட கேள்விகளின் தொடர்ச்சியாகவும், கட்சியின் மற்ற நிர்வாகிகள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையிலும் விஜய்யிடம் அதிகாரிகள் அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டனர். குறிப்பாக, நிகழ்ச்சி ஏற்பாட்டில் ஏற்பட்ட குளறுபடிகள், விஜய் வருவதற்கு ஏற்பட்ட 7 மணி நேரத் தாமதம் மற்றும் அந்தத் தாமதத்தினால் கூடிய கட்டுக்கடங்காத கூட்டம் குறித்தும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது. டெல்லி தாஜ் மஹால் ஹோட்டலில் தங்கியிருந்த விஜய், அங்கிருந்து பலத்த பாதுகாப்புடன் சி.பி.ஐ. அலுவலகம் வந்தடைந்தார்.

சுமார் பல மணி நேர விசாரணைக்குப் பிறகு, இன்று மாலை சி.பி.ஐ. அலுவலகத்திலிருந்து வெளியேறிய விஜய், செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் கார் மூலம் விமான நிலையம் புறப்பட்டார். டெல்லி விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் அவர் இன்று இரவு சென்னை வந்தடைகிறார். விஜய்யின் வருகையை முன்னிட்டுச் சென்னை விமான நிலையத்தில் த.வெ.க. தொண்டர்கள் அதிகளவில் கூடும் வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணை அறிக்கை விரைவில் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், விஜய்யின் இந்த டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இதையும் படிங்க: "6 மணி நேர விசாரணை நிறைவு!" சிபிஐ அலுவலகத்திலிருந்து வெளியே வந்த விஜய்! நாளையும் ஆஜராக உத்தரவு!


 

இதையும் படிங்க: "அரசியல் ஆதாயம் தேடாதீங்க!" நேரத்தை வீணடிக்க விரும்பல! பாஜக தலைவரின் புகாருக்கு செந்தில் பாலாஜி பதிலடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share