வெறும் ₹1.75 லட்சத்தில் எம்.எல்.ஏ ஆன ஒரே கட்சி தவெக தான்! மதுராந்தகத்தில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பெருமிதம்!
வெறும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவு செய்து சட்டமன்ற உறுப்பினரான ஒரே கட்சி தமிழக வெற்றி கழக கட்சி என அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வெறும் 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவு செய்து சாமானியர்களைச் சட்டமன்ற உறுப்பினராக்கிய ஒரே கட்சி தமிழக வெற்றி கழகம் தான் என்று ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் பணத்தில் ஒரு ரூபாய் ஊழல் நடந்தாலும் முதலமைச்சர் விஜய் பதவியை பறித்துவிடுவார் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சித்தாமூர் அடுத்த நல்லாமூர் பகுதியில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் ஏற்பாட்டில் 10,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பிரம்மாண்ட விழா நடைபெற்றது.
இந்த விழாவில் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சரத்குமார் ஆகியோர் கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதே விழாவில், அமைச்சர் புஸ்ஸி ஆனந்தின் 62-வது பிறந்தநாளும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு, 62 கிலோ எடையுள்ள மெகா கேக் வெட்டப்பட்டது.
இதையும் படிங்க: 2029 தேர்தலுக்கான ராகுலின் மாஸ்டர் பிளான்? விஜயை மையமாக வைத்து புதிய வியூகம்!
நலத்திட்ட உதவிகளை வழங்கி மேடையில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசியதாவது, தமிழக அரசியல் வரலாற்றிலேயே வெறும் 1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் தேர்தல் செலவு செய்து, சாதாரண எளிய மனிதர்களைச் சட்டமன்ற உறுப்பினர்களாக (MLA) மாற்றிய ஒரே கட்சி நம்ம தமிழக வெற்றி கழகம் மட்டும்தான். தவெக ஆட்சியில் மக்கள் பணத்தில் இருந்து ஊழல் என்பது துளியும் நடக்காது. ஒரு ரூபாய் கூட கொள்ளையடிக்க முடியாது.
அதை மீறி நாங்கள் அமைச்சர்களோ அல்லது நிர்வாகிகளோ யாராவது தவறு செய்தால், நமது தளபதி (முதலமைச்சர் விஜய்) அவர்கள் அடுத்த நிமிடமே எங்களைப் பதவியில் இருந்து தூக்கி எறிந்துவிடுவார் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த அளவுக்குத் தூய்மையான நிர்வாகத்தை முதலமைச்சர் நடத்தி வருகிறார்.
இந்த ஆட்சியில் இளைஞர்களுக்கும், தாய்மார்களுக்கும் அதிக அளவிலான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்குவது உறுதி செய்யப்படும். குறிப்பாக, மகளிர் சுயவழிக் குழுக்களுக்கும், தையல் பயிற்சிப் பெற்ற பெண்களுக்கும் தொழில் தொடங்கத் தேவையான கடன் வசதிகள் கூடிய விரைவில் தங்கு தடையின்றி செய்து தரப்படும் என உறுதியளித்தார்.
இந்த பிரம்மாண்ட நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் தவெக மாவட்ட செயலாளர் பாலாஜி, அருங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் யோகேஷ் பாபு, ஜமீன் எண்டத்தூர் பகுதியைச் சேர்ந்த பொன் பூபாலன் மற்றும் தவெக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும், தாய்மார்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத்தில் திமுக-காங்கிரஸ் நேரடி மோதல்? ஆகஸ்டில் ‘அணுகுண்டு’ வெடிக்கும் என பிரவீன் சக்கரவர்த்தி பரபரப்பு!