வன்கொடுமை புகாரில் பிரபல தவெக வழக்கறிஞர் கைது... விசாரணையின் போது ஸ்டேஷனிலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு...!
முசிறியில் பெண் கொடுத்த புகாரில் த.வெ.க. நிர்வாகி கைது: காவல் நிலையத்திலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில், பெண் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட பிரபல வழக்கறிஞரும், தமிழக வெற்றிக் கழக நிர்வாகியுமான பாரதிராஜா காவல் நிலையத்திலேயே மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முசிறி இந்திரா நகரைச் சேர்ந்த சுகிதா (42) என்பவர், தனது சொந்தப் பிரச்சனை தொடர்பாக வழக்கறிஞர் பாரதிராஜாவை அணுகியுள்ளார். அப்போது, பாரதிராஜா அவரிடம் எல்லை மீறி நெருக்கமாக பழக முயன்றதாகவும், அதனை தட்டி கேட்டபோது, கடந்த 05.10.2026 அன்று தகாத வார்த்தைகளால் திட்டி, கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சுகிதா அளித்த புகாரின் பேரில், முசிறி காவல்துறையினர் பாரதிராஜா மீது 75(1), 296(b), 115(2), 351(2) மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க: இடைத்தேர்தல் முன்னிலை: தவெக அரசுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்! அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி!
கைது செய்யப்பட்ட பாரதிராஜா, கடந்த அதிமுக ஆட்சியின் போது அரசு வழக்கறிஞராக பதவி வகித்தவர் ஆவார். பின்னர் அதிமுகவில் இருந்து விலகி, தற்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
கைது செய்யப்பட்ட பாரதிராஜாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டிருந்தபோது, அவர் திடீரென காவல் நிலையத்திலேயே மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை உடனடியாக மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அரசியல் கட்சி நிர்வாகியும், பிரபல வழக்கறிஞருமான பாரதிராஜா பெண் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்திலேயே மயங்கி விழுந்த சம்பவம் முசிறி மற்றும் திருச்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் பரபரப்பான விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ”இதுக்கு பிச்சை எடுக்கலாம்...” - ஊழல் அதிகாரிகளை விட்டு விளாசிய நீதிபதிகள்... தவெக அரசுக்கு வைத்த குட்டு...!