அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை.. தற்போது சாத்தியமில்லை..!! அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்..!!
அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை என்பது இப்போதைக்கு இல்லை, நிதி நிலைமை சரியில்லாததால் அதனை சரி செய்ய வேண்டி உள்ளது என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்திற்கு அருகிலுள்ள அன்னூரில் தமிழக வெற்றி கழகத்தில் (த.வெ.க) இணையும் நிகழ்வு நடைபெற்றது. அதிமுக, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பலரும் இந்த நிகழ்ச்சியில் த.வெ.கவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கமலி மற்றும் அருண் ராஜ் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் நிர்வாகி வசந்த் சண்முகம் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் த.வெ.கவில் இணைந்தனர். அமைச்சர்கள் இருவரும் அவர்களுக்கு சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். இந்த இணைப்பு நிகழ்வு பெரும் பரபரப்புடன் நடைபெற்றது.
நிகழ்ச்சி முடிந்ததும் வெளியே வந்த அமைச்சர் அருண் ராஜிடம் செய்தியாளர்கள் தொடர் கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக, தேர்தல் வாக்குறுதியின்படி அனைவருக்கும் வழங்க உறுதியளிக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்பது குறித்து வினவினர். கடந்த திமுக ஆட்சியில் பயன்பெற்றவர்களுக்கு கடந்த மாதம் தொகை வழங்கப்பட்ட நிலையில், இதுவரை பயன்பெறாத பலரும் இந்தத் திட்டத்துக்காகக் காத்திருப்பதாகவும், அவர்களுக்கு எப்போது பணம் வரும் எனவும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு சிறிது நேரம் மௌனம் காத்த அமைச்சர் அருண் ராஜ், “தற்போது மாநிலத்தின் நிதிநிலை சரியான நிலையில் இல்லை. அதை படிப்படியாக சீரமைத்த பிறகே இந்தத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த முடியும். இப்போதைக்கு சாத்தியமில்லை” என சூசகமாகப் பதிலளித்துவிட்டுச் சென்றார். மேலும், அன்னூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததாக எழுந்த புகார்கள் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அமைச்சர், “மருத்துவமனையை நேரில் ஆய்வு செய்த பின்னர் இது குறித்து விரிவாகப் பேசுகிறேன்” எனக் கூறி பதிலைத் தவிர்த்தார்.
இதையும் படிங்க: திமுகவில் இணைந்தார் ஸ்ரீநிதி! கோவையில் தங்களை மேலும் பலப்படுத்தும் திமுகவின் மாஸ் மூவ்!
இந்த இணைப்பு நிகழ்வு த.வெ.கவுக்கு புதிய வலு சேர்ப்பதாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது. அன்னூர் பகுதியில் உள்ள உள்ளூர் பிரச்னைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்பார்ப்புகளுக்கு இந்த நிகழ்வு முக்கியத்துவம் சேர்த்துள்ளது.
இதையும் படிங்க: இன்னும் எத்தனை உயிர்களை இழப்போம்? மத்திய அரசுக்கு சிபிஐ(எம்) மாநில செயலாளர் கடும் கண்டனம்!