அந்த கரடி பொம்மை என்ன விலை சார்? திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கலாய்த்து அமைச்சர் ராஜ்மோகன் பதிவு!
மதுராந்தகம் பிரசாரத்தில் ஸ்டாலின், தவெகவை ஒரு பொருட்டாக கருதாமல் இருந்ததே திமுக செய்த தவறு என்றும், தவெக ஆட்சி குறித்து கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார்.
மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தவெக இடையிலான வார்த்தைப் போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஸ்டாலின், தவெக மற்றும் அதன் தலைமை குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த நிலையில், அதற்கு தவெக அமைச்சர் ராஜ்மோகன் சமூக வலைதளப் பதிவு மூலம் பதிலளித்துள்ளார்.
ராஜ்மோகன் வெளியிட்ட பதிவில், தவெகவை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்று திமுக தரப்பில் கூறப்பட்டால், தங்கள் கட்சி தொடர்பான செய்திகளை ஊடகங்களில் இருட்டடிப்பு செய்ய முயன்றதாக ஏன் குற்றச்சாட்டுகள் எழுகின்றன என கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக செய்தி ஊடகங்களின் செயல்பாடு, யூடியூப் வீடியோக்களின் தலைப்புப் படங்கள் மற்றும் சமூக வலைதள உள்ளடக்கங்கள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை அவர் முன்வைத்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்யை புகழ்ந்து செய்திகள் வெளியாகக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், கருத்துக்கணிப்புகள் தொடர்பாக திமுக தரப்பில் பதற்றம் இருந்ததாகவும் ராஜ்மோகன் தனது பதிவில் விமர்சித்துள்ளார். மேலும், இதற்காகவே நிலையான வழிகாட்டு நடைமுறைகள் எனப்படும் SOP கொண்டு வரப்பட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: S.I.R மட்டும் இல்லையென்றால் த.வெ.க. இன்னும் அதிக இடங்களில் வென்றிருக்கும்! அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி!
இதுமட்டுமின்றி, விஜய்யின் உடை, அவரது ராம்ப் வாக் உள்ளிட்டவற்றை திமுக தரப்பினர் பின்பற்றுவதாக கிண்டலான தொனியில் ராஜ்மோகன் குறிப்பிட்டுள்ளார். விஜய் ராம்ப் வாக் சென்றால் அதை பார்த்து பாம்பு வாக் செல்வது போல உள்ளதாகவும், தவெக தொண்டர்கள் அன்புடன் துண்டு வீசும் நிகழ்வுகளை பின்பற்ற முயற்சிப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
தனது பதிவில் நகைச்சுவை வசனங்களையும் பயன்படுத்திய ராஜ்மோகன், “அந்த கரடி பொம்மை என்ன விலை சார்... அது கண்ணாடி சார்” என்ற பாணியில் திமுக தலைமையை கிண்டல் செய்துள்ளார். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருப்பதாகவும், எதிர்கால தேர்தல்களில் மக்கள் தகுந்த பதிலை அளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் பிரசாரத்தில் ஸ்டாலின், தவெகவை ஒரு பொருட்டாக கருதாமல் இருந்ததே திமுக செய்த தவறு என்றும், தவெக ஆட்சி குறித்து கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்திருந்தார்.
இதையடுத்து ராஜ்மோகனின் சமூக வலைதளப் பதிவு தவெக மற்றும் திமுக ஆதரவாளர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பினரின் விமர்சனங்களும் தேர்தல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் கண்காணிப்பில் வீரமணி! யாரும் தப்பிக்க முடியாது! அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி!