திருப்பத்தூர் தவெக எம்எல்ஏவுக்கு செக்..! நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க ஹைகோர்ட் தடை..!
திருப்பத்தூர் தமிழக வெற்றி கழக எம்எல்ஏ இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் வெளியான நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் ஏற்பட்ட அதிர்ச்சி தோல்வி திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ச்சியாக நான்கு முறை வெற்றி பெற்று, இருமுறை அமைச்சராகப் பொறுப்பேற்ற கே.ஆர். பெரியகருப்பன், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சீனிவாச சேதுபதியிடம் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இந்த முடிவு திமுகவின் பாரம்பரிய கோட்டையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பெரியகருப்பன் 83,364 வாக்குகளைப் பெற்ற நிலையில், சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கடைசி சுற்று வாக்கு எண்ணிக்கையில் இந்த மாற்றம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. முன்பு 30 வாக்குகள் முன்னிலையில் இருந்த பெரியகருப்பன், இறுதியில் ஒரு வாக்கால் தோற்றுப் போனது, தேர்தல் வரலாற்றில் அரிதான சம்பவமாகப் பார்க்கப்படுகிறது.
திருப்பத்தூர் தொகுதி திமுகவுக்கு நீண்டகாலமாக வலுவான கோட்டையாக இருந்து வந்தது. 2006 முதல் பெரியகருப்பன் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நிலையில், இந்தத் தோல்வி கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. இந்தச் சூழலில், சென்னை செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருப்பத்தூர் தொகுதி முடிவை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்தார்.
இதையும் படிங்க: ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் சமம்..! சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் உறுதி..!
இதைத்தொடர்ந்து பெரிய கருப்பன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடந்துவரும் நிலையில், இன்று சட்டமன்றத்தில் பெரும்பான்மையின் நிரூபிக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க திருப்பத்தூர் தொகுதி எம்எல்ஏ சீனிவாச சேதுபதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தமிழக வெற்றி கழகத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: என்ன நடக்கபோகுதோ..! பெரும்பான்மை நிரூபிக்கும் தவெக..! சட்டசபைக்கு புறப்பட்ட முதல்வர் விஜய்..!