QR கோடு முக்கியம்... இதெல்லாம் செய்யவே கூடாது.. விஜய்யின் புதுவை மக்கள் நிகழ்ச்சி நிபந்தனைகளை வெளியிட்ட தவெக...!
புதுச்சேரியில் விஜய் மக்கள் நிகழ்ச்சி நடத்தும் நிலையில் நிபந்தனைகளை தமிழக வெற்றி கழகம் வெளியிட்டுள்ளது.
நாளை புதுச்சேரி, உப்பளத்தில் காலை 10.30 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. காவல் துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இந்த நிகழ்ச்சிக்குப் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக வெற்றி கழகம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் உள்பட, தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது என்றும் கர்ப்பிணிப் பெண்கள் கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் புதுவை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை என்றும் இவர்கள் வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு தமிழக வெற்றிக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
விஜய் பிரச்சாரம் செல்லும்போது, முடித்துவிட்டு வரும்போது இருசக்கர வாகனத்திலோ அல்லது வேறு வாகனங்களிலோ பின்தொடர்வது, போக்குவரத்திற்கு இடையூறாகச் செயல்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை அறவே தவிர்க்க வேண்டும் என்றும் வாகனங்களை நிறுத்துவதற்குக் காவல் துறை அனுமதித்துள்ள பாண்டி மெரினா பார்க்கிங், பழைய துறைமுகம் மற்றும் இந்திராகாந்தி ஸ்டேடியம் பின்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புதுவையில் விஜய்... தமிழ்நாட்டுக் காரங்களுக்கு அனுமதி கிடையாதாம்..! முக்கிய நிபந்தனை..!
கழக நிர்வாகிகள் தலைமைக் கழகத்தால் வழங்கப்படும் பேட்ஜ் அணிந்தும், தன்னார்வலர்கள் சீருடை அணிந்தும் தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள். மரங்கள். வாகனங்கள் கொடிக் கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறக் கூடாது என்றும் மின்விளக்குக் கம்பங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள் ஆகியவற்றின் அருகில் செல்லக் கூடாது எனவும் சிலைகள் மற்றும் அவற்றைச் சுற்றி ஏதும் பாதுகாப்பு கிரில் கம்பிகள், தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தவெக சின்னத்தைப் பார்த்து நாடே வியக்கப் போகுது... இனி விஜய் தான் எல்லாம்... மார்த்தட்டும் செங்கோட்டையன்...!