நாளை பதவியேற்பு விழா..!! விஜய்யுடன் பதவி ஏற்கப்போகும் அந்த 9 அமைச்சர்கள் யார் யார்..??
தவெக தலைவர் விஜய் உடன் சேர்ந்து 9 அமைச்சர்களும் நாளை பதவி ஏற்க உள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் 120 உறுப்பினர்களைக் கொண்ட பெரும்பான்மை கூட்டணியை உருவாக்கியுள்ள தவெக, ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது.
நாளை மாலை தவெக தலைவர் நடிகர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடனேயே, திமுகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட காங்கிரஸ் கட்சி தவெகவுக்கு தனது ஆதரவை அறிவித்தது. இதன் மூலம் தவெகவின் பலம் 113 ஆக உயர்ந்தது. அதன்பிறகு சிபிஐ, சிபிஎம் கட்சிகள் தங்களது ஆதரவை வழங்கின. இன்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியும் (விசிக) தவெகவுக்கு ஆதரவுக் கடிதத்தை சமர்ப்பித்ததுடன், கூட்டணியின் மொத்த எண்ணிக்கை 120-ஐத் தொட்டுள்ளது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று மாலை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து, பெரும்பான்மை ஆதரவுக் கடிதங்களைச் சமர்ப்பித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆளுநர் உடனடியாக அவருக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, நாளை மாலை விஜய் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருடன் சேர்த்து 9 அமைச்சர்களும் பதவி ஏற்கவிருக்கின்றனர்.
இதையும் படிங்க: நாடே எதிர்பார்த்த தருணம்.. நாளை மாலை 3.15 மணிக்கு..!! தமிழக முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்..!!
புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நிர்மல்குமார், அருண்ராஜ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், காங்கிரஸ் சார்பில் இரு அமைச்சர்களுக்கான பெயர்களை இன்றிரவு தவெக தலைமைக்கு அளிக்க உள்ளது. இன்றிரவு 10 மணிக்கு மேல் அதிகாரப்பூர்வ அமைச்சரவை பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதும் இந்த மாற்றம், இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைமை, “மக்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் வேகமான நிர்வாகத்தை உருவாக்குவோம்” என உறுதியளித்துள்ளது. புதிய அரசு எதிர்கொள்ளும் முக்கிய சவால்களாக வேலைவாய்ப்பு, விவசாயம், தொழில்துறை வளர்ச்சி, கல்வி சீர்திருத்தம் ஆகியவை கருதப்படுகின்றன.
இந்த அரசியல் கூட்டணி மாற்றங்கள் தமிழக அரசியல் சமன்பாட்டை முழுமையாக மாற்றியுள்ளன. தவெகவின் ஒற்றைப்படை வெற்றியும், பல கட்சிகளின் உடனடி ஆதரவும், மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நாளை நடைபெறும் பதவியேற்பு விழா தமிழக வரலாற்றில் முக்கியமான நிகழ்வாகப் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பில் இறுதிக் கட்டம்..!! விஜய் இந்த செய்தியை வெளியிடனும்..!! தமிழிசை வேண்டுகோள்..!!