கச்சத்தீவு தமிழர்கள் உரிமை! என்ன திமிரு இருக்கும்? இலங்கை அதிபரை சாடிய வேல்முருகன்
கச்சத்தீவு குறித்த இலங்கை அதிபரின் பேச்சுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்தார்.
கச்சத்தீவு விவகாரம் தமிழ்நாட்டு அரசியலில் நீண்ட காலமாகவே உணர்ச்சிமிக்க மற்றும் சர்ச்சைக்குரிய ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் நெடுந்தீவிற்கும் இடையே அமைந்துள்ள இந்தச் சிறிய தீவு, 1974-ம் ஆண்டு இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்கவும், தீவை மீட்கவும் வேண்டுமென அரசியல் கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த விவகாரம் தமிழக அரசியல் மேடைகளில் மட்டுமல்லாமல், இந்திய நாடாளுமன்றத்திலும், பொதுத் தேர்தல் காலங்களிலும் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. கச்சத்தீவை மீட்பது மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கச்சத்தீவு விவகாரத்தில் இலங்கை அதிபர் திட்டவட்டமாக பேசி உள்ளார். கச்சத்தீவு பற்றிய கருத்தாடல் நடைபெற்று வருகிறது. அது எங்களுடைய பூமி. பின் நாட்களில் கச்ச தீவுக்கு செல்ல விரும்புவதாக இலங்கை அதிபர் அனுரகுமார திசய நாயக்க தெரிவித்தார். இந்த நிலம், நீர், ஆகாயம் ஆகியவை எங்கள் மக்களுக்கு சொந்தமானது என்று கூறினார். எந்த நாளிலும் அதிகாரமாக, அடிமையாக விடமாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தார். மக்களின் உரிமைகளை பாதுகாப்பது அரசின் கடமை., அதை நாங்கள் செய்து வருகிறோம் என கூறினார்.
இதையும் படிங்க: கேள்விக்குறியாகும் கோரிக்கைகள்! கச்சத்தீவு எங்க பூமி... கறார் காட்டும் இலங்கைய அதிபர்
இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்காவின் திமிர்ப்பேச்சைக் கண்டிப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார். இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க கச்சத்தீவைப் பார்வையிட்டு, அந்தத் தீவை எந்தக் காலத்திலும் விட்டுத் தரமாட்டோம் என்று கூறியிருப்பது, தமிழக மீனவர்களின் உரிமைக்கும் , ஒன்றிய அரசுக்கும், தமிழக அரசுக்கும், நேரடியாகச் சவால்விடும் அகந்தை மிகுந்தப் பேச்சு என்றும் அவரது இந்தப் பேச்சை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்றும் கூறினார்.
கச்சத்தீவு என்பது இலங்கையின் சொத்து அல்ல., அது தமிழர்களின் உரிமை நிலம் என்றும் எங்கள் முன்னோர்களின் வியர்வை, எங்கள் மீனவர்களின் இரத்தம், எங்கள் தாய்மொழி தமிழின் அடையாளங்கள் அனைத்தும் கலந்த புனித நிலம் என தெரிவித்தார். இலங்கை அதிபரின் திமிர்ப் பேச்சுக்குப் பிறகும், ஒன்றிய அரசும், குறிப்பாகத் தமிழகம் சார்ந்த அமைச்சர்களும், இன்னும் மௌனமாக இருப்பது, வரலாற்றின் பெரும் துரோகம் என்று கூறிய அவர், கச்சத்தீவு விவகாரத்தில், இந்தியா நமது உரிமையை வலியுறுத்தத் தயங்கினால், அது தமிழக மக்களின் நம்பிக்கையை, முற்றிலும் இழக்கும் என்பதே உண்மை என கூறினார்.
தமிழக அரசும், ஒன்றிய அரசும் இணைந்து, கச்சத்தீவை மீட்டெடுப்பதற்கான சட்ட, அரசியல் நடவடிக்கைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படாவிட்டால் தமிழகத்தில் மிகப் பெரிய மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
இதையும் படிங்க: அரசு நிதியில் பயணம்.. எழுந்த பரபரப்பு புகார்.. இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கைது..!!