உரிமைகள் முழுமையா கிடைக்கணும்..! விஜய் உழைப்பாளர் தின வாழ்த்து..!
இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்படும் நிலையில் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
உழைப்பாளர் தினம், அல்லது மே தினம், உலகம் முழுவதும் மே 1 அன்று கொண்டாடப்படும் ஒரு முக்கியமான தினமாகும். இது தொழிலாளர்களின் உழைப்பு, ஒற்றுமை மற்றும் உரிமைகளுக்காக நடைபெற்ற போராட்டங்களை நினைவுகூரும் நாள். தமிழ்நாட்டில் இந்த தினம் உழைப்பாளர் தினம் அல்லது உழைப்பாளர் நாள் என்று அழைக்கப்படுகிறது. இன்று, 2026 மே 1, வெள்ளிக்கிழமையன்று தமிழ்நாட்டில் இது பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உழைப்பாளர் தினத்தின் வரலாறு தமிழ்நாட்டுடன் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்துள்ளது. 1923 மே 1 அன்று சென்னை நகரில் இந்தியாவின் முதல் மே தினக் கொண்டாட்டம் நடைபெற்றது. தொழிற்சங்கத் தலைவரும், தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவருமான எம். சிங்காரவேலர் இதை ஏற்பாடு செய்தார். லேபர் கிசான் கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள கடற்கரை மற்றும் திருவான்மியூர் கடற்கரை ஆகிய இரு இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. இந்தக் கூட்டங்களில் தொழிலாளர்களின் உரிமைகள், எட்டு மணி நேர வேலை நாள் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்தியாவில் முதன்முறையாக செங்கொடி ஏற்றப்பட்டதும் இந்த நிகழ்வின்போதுதான். இந்தக் கொண்டாட்டம் இந்திய தொழிலாளர் இயக்கத்துக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
தமிழ்நாட்டில் உழைப்பாளர் தினம் ஒரு பொது விடுமுறை நாளாக 1967ஆம் ஆண்டு தி.மு.க. அரசால் முதன்முறையாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆண்டுதோறும் இந்த தினம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இன்றைய தமிழ்நாட்டில் தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் தொழிலாளர் அமைப்புகள் மே 1 அன்று ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் போராட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்கின்றன. சென்னை உள்ளிட்ட நகரங்களில் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து அணிவகுப்புகள் நடத்துகின்றனர்.
இதையும் படிங்க: “தவெக 200 தொகுதிக்கு மேல் வெல்லும்...” - பகல் கனவு காண்கிறாரா செங்கோட்டையன்... கோவையில் பரபரப்பு பேட்டி...!
இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்படும் நிலையில் உழைக்கும் கரங்களை போற்றுவோம் என தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உழைப்பாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். உழைப்பால் உயர்வோம் என்று இரவு பகலாக உழைத்து வரும் உழைப்பாளர்களுக்கான உரிமைகள் முழுமையாக அவர்களுக்குக் கிடைக்க, உழைப்பாளர்களின் வாழ்வாதாரம் மேலும் உயர உறுதியேற்போம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கணிப்பா? கானல் நீரா?... Axis My India கருத்துக்கணிப்பில் இதை கவனிச்சீங்களா?... குஷியில் தவெக...!