விஜயின் அடுத்த மூவ்... சுற்றுப்பயணம் எப்போது? தவெக நிர்வாக குழுவில் ஆலோசனை...!
பனையூரில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கரூரில் சுற்றுப்பயணம் நடத்திய போது கூட்டு நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். தமிழக அரசியலில் புதிய அலை எனக் கூறப்பட்ட விஜயின் சுற்றுப்பயணத்தை இந்த சம்பவம் முடக்கிப் போட்டது. கரூர் சம்பவம் நடந்து ஒரு மாத காலம் ஆகிறது. இதுவரை விஜய் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதற்கிடையில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு கரூருக்கு விஜய் செல்வது தொடர்பான திட்டம் ரத்து செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து வந்து ஆறுதல் கூறினார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் கண்ணீர் விட்டு விஜய் மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்பட்டது. தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகளை கரூர் சம்பவம் முடக்கியிருந்த நிலையில், 28 பேர் கொண்ட குழுவை விஜய் நியமித்திருந்தார். கட்சியின் அன்றாட பணிகளை இந்தக் குழு கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக குழு கூட்டம் இன்று கூடியது.
இந்தக் கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழுவை உடனடியாக கூட்டுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜயின் சுற்றுப்பயணத்தை மீண்டும் தொடங்குவது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. பனையூரில் நடைபெறும் இந்த நிர்வாக குழு கூட்டத்தில் 28 பேர் கொண்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING மீண்டும் அதிரடி ரூட்டில் விஜய்... நாளை பனையூரில் கூடுகிறது தவெக நிர்வாகக் குழு...!
கட்சியை பலப்படுத்துவது தொடர்பாகவும், நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் இன்னும் மாவட்ட செயலாளர் இல்லாத நிலையில் அது தொடர்பாகவும், கட்சியில் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த அதிரடி... 28 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்ட விஜய்... தவெகவில் புதிய குழு நியமனம்...!