சூடுபிடிக்கும் அரசியல் களம்..!! தவெக தலைவர் விஜய் போட்டியிடப்போகும் தொகுதி எது தெரியுமா..??
தவெக தலைவர் விஜய் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக களமிறங்க உள்ளது. மாநிலத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் முடிவுடன், ஆட்சியைப் பிடிக்கும் நம்பிக்கையுடன் தயாராகி வருகிறது இக்கட்சி. முதலமைச்சர் வேட்பாளராக நடிகர் விஜய் முன்னிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு தொகுதிக்கும் தகுதியான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி விரைவில் தொடங்கவுள்ளது.
விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பது குறித்து கட்சியினரிடையே தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. கட்சி தொடங்கியபோதே, வெற்றியைக் குறிக்கும் வகையில் 'வி' என்ற எழுத்தில் தொடங்கும் தொகுதிகளை முன்னிலைப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, விக்கிரவாண்டி, வேளச்சேரி, விருகம்பாக்கம் உள்ளிட்ட சில தொகுதிகள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன. இவற்றில் விக்கிரவாண்டி தொகுதியே விஜய்க்கு முதன்மைத் தேர்வாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நான் வரேன் வேலூருக்கு..!! அடுத்த பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்..!! எப்போ தெரியுமா..??
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள விக்கிரவாண்டி தொகுதி, கிராமப்புறங்கள் நிறைந்த பகுதியாகும். இதில் 103 ஊராட்சிகளுடன் விக்கிரவாண்டி, காணை, கோலியனூர், கண்டமங்கலம் போன்ற பகுதிகள் அடங்கியுள்ளன. 2011-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு தற்போதைய வடிவில் இது செயல்பட்டு வருகிறது.
இத்தொகுதியில் உள்ள வி.சாலை (விக்கிரவாண்டி சாலை) பகுதியில்தான் தவெகவின் முதல் பெரும் அரசியல் மாநாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. அங்கு விஜய் கொடியேற்றிய 100 அடி உயர கொடிக்கம்பம் இன்றும் கம்பீரமாக நிற்கிறது. அதில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு மற்றும் வானளாவிய உயரத்தில் பறக்கும் தவெக கொடி, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பலர் இங்கு வந்து கொடிக்கம்பத்தைப் பார்வையிட்டு, விஜய்யின் படத்துடன் கூடிய கல்வெட்டு அருகே புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
இந்தத் தொகுதியை விஜய் தனது முதல் தேர்தல் அரங்கமாகத் தேர்வு செய்திருப்பதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவதாக, கட்சியின் வரலாற்று முதல் மாநாடு நடைபெற்ற இடம் என்பதால் உணர்வுபூர்வமான தொடர்பு உள்ளது. இரண்டாவதாக, விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருப்பதால், வடக்கு மாவட்டங்களில் பிரசாரம் செய்வதற்கு எளிதாக சென்று வர முடியும். மேலும், தனது சொந்தத் தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு, மாநிலம் முழுவதும் பயணிக்கும் வசதியும் கிடைக்கும் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தவெகவின் இந்த முதல் தேர்தல் பயணம் தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். விஜய்யின் ரசிகர்களின் ஆதரவுடன், கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் வலுவான அமைப்பை உருவாக்கி வருவதால், தேர்தல் களம் சுவாரஸ்யமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: அரசியலமைப்பின் மாண்பைக் காக்க உறுதி ஏற்போம்..!! தவெக தலைவர் விஜய் குடியரசு தின வாழ்த்து..!!