×
 

பழனி கோவில் நில விவகாரத்தில் ட்விஸ்ட்! செய்தி வெளியிட்ட நிறுவனத்திற்கு 10 கோடி நஷ்ட ஈடு நோட்டீஸ்!

தன்மீது அவதூறு பரப்பும் நோக்கில் வீடியோ மற்றும் செய்தி வெளியிட்டுள்ள விகடன் குழுமத்தின் மீது 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி திமுக முன்னாள் அமைச்சர் சக்கரபாணி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பழனி முருகன் கோவில் நில விவகாரத்தில் தன் மீது எவ்வித ஆதாரமுமின்றி, திட்டமிட்ட உள்நோக்கத்துடன் அவதூறு பரப்பும் வகையில் செய்தி மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளதாகக் கூறி, விகடன் குழுமத்திற்கு எதிராக திமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான திரு. அர.சக்கரபாணி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தன் மீது பரப்பப்பட்ட அவதூறுக்காக விகடன் குழுமம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்றும், 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்குச் சொந்தமான, சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.35 ஏக்கர் நிலத்தை ஒரு தனியார் அறக்கட்டளை தங்களுக்குச் சொந்தமானது என்று கூறி, கடந்த மார்ச் 2026-ல் டி. சேதுபதி மற்றும் கே. வெள்ளத்துரை ஆகிய இரு நபர்களுக்கு வெறும் 2 கோடி ரூபாய்க்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளது.

இந்த நிலப் பதிவு தொடர்பாக அண்மையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அளித்த தீர்ப்பின்படி, அந்த முறைகேடான விற்பனைப் பத்திரம் ரத்து செய்யப்பட்டது. பிரதான எதிர்க்கட்சியான திமுக, இந்த விவகாரத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி முறையான விசாரணையை வலியுறுத்தி வருகிறது. திமுக சட்டத்துறை இணைச்செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. பரந்தாமன், பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பழனி கோவில் நில மோசடி விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஏற்கனவே வலியுறுத்தியிருந்தார்.

இதையும் படிங்க: டெங்குவுக்கு முடிவுகட்டும் புதிய தடுப்பூசி! இந்தியாவில் முதல் முறையாக கிடைத்த அங்கீகாரம்!!

இந்நிலையில், இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளையும், உயர் அதிகாரிகளையும் காப்பாற்றும் நோக்கோடும், பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் வகையிலும் விகடன் டிவியின் யூடியூப் பக்கத்தில் கடந்த ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் முன்னாள் அமைச்சர் திரு. சக்கரபாணி அவர்களைத் தொடர்புபடுத்தி அவதூறு வீடியோக்கள் வெளியிடப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், ஜூனியர் விகடன் இதழில் (தேதி: 22.07.2026) 'பழனி நில சர்ச்சை... சக்கரபாணிக்கு சிக்கல்' என்ற தலைப்பில் முன்னாள் அமைச்சர் அர. சக்கரபாணி அவர்களின் புகைப்படத்துடன் அவதூறான கட்டுரை பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில், நிலத்தை வாங்கியவர்களோடு அர. சக்கரபாணி அவர்களைத் தொடர்புபடுத்தி எவ்வித ஆதாரமுமின்றி அப்பட்டமான பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. நிலத்தை வாங்கியதாகக் கூறப்படும் வெள்ளத்துரை மற்றும் சேதுபதி ஆகிய நபர்கள் யார் என்று கூட தனக்குத் தெரியாது என முன்னாள் அமைச்சர் அர. சக்கரபாணி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த விவகாரத்தில் விகடன் செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்டபோதே இக்குற்றச்சாட்டுகளை அவர் மறுத்திருந்தார். இருப்பினும், அடிப்படை ஊடக அறத்தை மீறி, அவரது மறுப்பைப் பிரசுரிக்காமல் திட்டமிட்ட உள்நோக்கத்துடன் இந்த அவதூறு பரப்பப்பட்டுள்ளதாக நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் அர.சக்கரபாணி அவர்களின் சார்பில் அனுப்பப்பட்டுள்ள இந்த வழக்கறிஞர் நோட்டீஸில் விகடன் குழுமத்திற்குப் பின்வரும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன:

யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள இரு அவதூறு வீடியோக்களையும் விகடன் குழுமம் உடனடியாக நீக்க வேண்டும். ஜூனியர் விகடன் இதழில் பிரசுரிக்கப்பட்ட அவதூறு கட்டுரையைத் திரும்பப் பெற வேண்டும் மற்றும் விற்கப்படாத இதழ்களை உடனடியாக அழிக்க வேண்டும். அடுத்த ஜூனியர் விகடன் இதழின் அட்டைப் பக்கத்திலும், இணையதளத்திலும் முன்னாள் அமைச்சர் அர. சக்கரபாணி அவர்களிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கோரி செய்தி வெளியிட வேண்டும். அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காக ரூ. 10 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும்.

இந்த வழக்கறிஞர் நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற 7 நாட்களுக்குள் இக்கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால், விகடன் குழுமத்தின் மீதும், சம்பந்தப்பட்ட செய்தியாளர்கள் மீதும் உரிய சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் சட்டப்படி எடுக்கப்படும் என அந்த கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சாரை சாரையாக படையெடுக்கும் சி.வி சண்முகம் ஆதரவாளர்கள்... அதிமுக தலைமை... தொண்டர்கள் கலக்கம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share