வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம்.. மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் கைது...!
வீட்டு மின் இணைப்புக்கு ரூ.5,500 லஞ்சம் வாங்கிய மின் வாரிய லைன் இன்ஸ்பெக்டர் மற்றும் கேங் மேன் ஆகிய 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா மொளசியை சேர்ந்தவர் நவநீதம் (36). எலக்ட்ரீசியன். அவரது தாயர் ஜானகி என்பவருக்கு சொந்தமான 81 சென்ட் நிலத்தில் வீடு கட்டி உள்ளார். அதற்கு மின் இணைப்பு பெறுவதற்காக, கடந்த ஜூன் 6ம் தேதி, ஆன்லைன் மூலம் ரூ. 13,300 செலுத்தி உள்ளார். ஆனால், மின் இணைப்பு கிடைக்கவில்லை. அதையடுத்து, எர்ணாபுரத்தில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் சென்று இது குறித்து கேட்டுள்ளார்.
அங்கு, குருக்கபுரம் எல்லப்பாளையத்தை சேர்ந்த லைன் இன்ஸ்பெக்டர் மாது (57), தளிகையை சேர்ந்த கேங்மேன் விவேகானந்தன் (41) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் ரூ. 5,500 லஞ்சம் கொடுத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் என, நவநீதனிடம் கேட்டனர். லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத நவநீதம், இது குறித்து, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்களின் ஆலோசனைப்படி, நேற்று பகல் 12:30 மணிக்கு, வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூர் ரோட்டில், பவுடர் தடவிய பணத்தை நவநீதம், இ.பி. கேங்மேன் விவேகானந்தனிடம் கொடுத்தார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., (பொ) ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் கொண்ட குழுவினர், கையும் களவுமாக விவேகானந்தனை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில், லைன் இன்ஸ்பெக்டர் மாதுவையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். வீட்டு இணைப்புக்கு, ரூ. 5,500 லஞ்சம் வாங்கிய மின் வாரிய லைன் இன்ஸ்பெக்டர், கேங்மேன் இருவரும் கைதான சம்பவம், மின்வாரிய பணியாளர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "CHENNAI ONE" மொபைல் ஆப்.. முதல்வரின் புது முன்னெடுப்பு.. தொடங்குகிறது போக்குவரத்து புரட்சி..!!
இதையும் படிங்க: விஜயை யாரும் விமர்சிக்க கூடாது.. தலைமையில் இருந்து வந்த அதிரடி உத்தரவு.. கப் சிப்பான அமைச்சர்கள்..!!