×
 

அடுத்தடுத்து விபத்து - 5 பள்ளி மாணவர்கள் பலி; முதல்வர் விஜய் நிவாரணம் அறிவிப்பு!

தமிழகத்தில் மன்னார்குடி மற்றும் உளுந்தூர்பேட்டையில் விபத்தில் 5 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த நிலையில், முதல்வர் விஜய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று மாலை அடுத்தடுத்து நேர்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் 5 பள்ளி மாணவர்கள் சம்பவ இடங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே இந்த விபத்துகள் நேர்ந்துள்ளன.

முதல் விபத்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரங்கேறியுள்ளது. காரிக்கோட்டை பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இன்று மாலை பள்ளி வகுப்புகள் முடிந்து மாணவர்கள் வழக்கம் போல் தங்களது வீடுகளுக்குச் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, தஞ்சாவூரிலிருந்து மன்னார்குடி நோக்கி அதிவேகமாக வந்த டவேரா கார் ஒன்று, காரிக்கோட்டை பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக அதன் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நடந்து சென்ற மாணவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில், 6-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களான லோகேஷ்வரன், ரஷித் மற்றும் 7-ஆம் வகுப்பு பயிலும் ராஜமுரளி ஆகிய 3 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உடல நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த மன்னார்குடி காவல் துறையினர், மாணவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோட முயன்ற கார் ஓட்டுநரை அப்பகுதி பொதுமக்கள் மடக்கிப் பிடித்துக் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இந்த விபத்து குறித்துப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள், "ராஜமுரளி, ரஷித் மற்றும் யோகேஸ்வரன் ஆகிய 3 மாணவர்களும் இறந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்; இறந்த மாணவர்களின் பெற்றோருக்கு அரசு என்றும் துணையாக நிற்கும்" எனத் தனது தார்மீக இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மற்றொரு துயர விபத்து கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், சிறுத்தனூர் கிராமம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை 4:45 மணி அளவில் நிகழ்ந்துள்ளது. ஐந்து மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது, விழுப்புரத்திலிருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி வந்த ஆம்னி வேன் மற்றும் ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 வயதான ஜெஸ்டின் மற்றும் 17 வயதான புருனோ ஆகிய இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆலன், சுஜீத் மற்றும் அஜய் ஆகிய 3 மாணவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்புச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்துத் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், "மாணவர்கள் உயிரிழந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று மாணவர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 5 மாணவர்கள் விபத்தில் பலியான சம்பவம் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: கூட்டணி தலைவர்களுடன் அடுத்தடுத்த சந்திப்பு: CPI பொதுச் செயலாளர் டி.ராஜாவை நேரில் சந்தித்தார் முதல்வர் விஜய்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share