மக்களின் கோபத்தை உணர்ந்து செயல்படுங்கள்! சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மத்திய அரசுக்கு முதல்வர் எச்சரிக்கை!
வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடும் எரிவாயு தட்டுப்பாட்டை கையாள தவறிய ஒன்றிய பாஜக அரசை, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று FAILURE MODEL எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.
சர்வதேச அரசியல் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் மத்திய பாஜக அரசு எடுத்துள்ள தவறான முடிவுகளே இந்தியாவில் தற்போது நிலவும் கடுமையான எரிவாயு (LPG) தட்டுப்பாட்டிற்கு முதன்மைக் காரணம் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். வெளியுறவுக் கொள்கையிலும் Failure Model எனப் பெயரெடுத்துள்ள மத்திய அரசின் செயலற்ற தன்மையால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கிப் போராடும் நிலை உருவாகியுள்ளது என அவர் சாடியுள்ளார்.
ஈரானுடனான வர்த்தக உறவுகள் மற்றும் ஹார்மூஸ் ஜலசந்தி விவகாரத்தில் மத்திய அரசு சரியான ராஜதந்திரத்தைக் கையாளாததால், இந்தியாவிற்கு வர வேண்டிய எரிவாயு கப்பல்கள் நடுக்கடலில் முடங்கின. இதனைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், சர்வதேச விவகாரங்களில் மத்திய அரசின் அணுகுமுறை ஒரு தோல்வி மாதிரி எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சிலிண்டர் தட்டுப்பாடு! தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்!
எரிவாயு தட்டுப்பாட்டைக் கண்டித்துத் தமிழகம் முழுவதும் இன்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் 50,000-க்கும் மேற்பட்ட இடங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. மக்களின் அடிப்படைத் தேவையான சமையல் எரிவாயுவைக் கூட தடையின்றி வழங்க முடியாத நிலையில் மத்திய அரசு உள்ளது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களின் கோபத்தை உணர்ந்து, மத்திய அரசு வீண் பிடிவாதத்தை விடுத்து உடனடியாக பேச்சுவார்த்தைகளை நடத்தி எரிவாயு விநியோகத்தைச் சீர்செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஒருபுறம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் அதே வேளையில், தமிழக மக்களுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகத் தமிழக அரசு ஏற்கனவே மின்சார மானியம் மற்றும் கூடுதல் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு போன்ற மக்கள் நல நடவடிக்கைகளை எடுத்துவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு இன்று மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில், முதலமைச்சரின் இந்தப் பேச்சு அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: பூதாகரமாகும் கேஸ் தட்டுப்பாடு பிரச்சனை..!! பெங்களூருவில் ஒரே நாளில் 25% ஓட்டல்கள் மூடல்..!!