EVM-களில் சீல் இல்லை! தேர்தல் முறைகேடு! ஆளுங்கட்சி மீது அதிமுக இன்பதுரை குற்றச்சாட்டு!
மதுராந்தகம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் EVM செயலிழந்ததாகவும் பல EVMகளில் சீல் இல்லை என்றும் இன்பாதுரை குற்றம்சாட்டியுள்ளார்.
மதுராந்தகம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் செயலிழந்ததாகவும், முறைகேடுகளைத் தட்டிக் கேட்ட முகவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு வேட்பாளர் வெளியேற்றப்பட்டதாகவும், தேர்தல் பிரச்சாரம் தொடங்கி வாக்கு எண்ணிக்கை வரை ஆளுங்கட்சியினர் உச்சகட்ட அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் இன்பாதுரை பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் நடக்கும் அத்துமீறல்கள் மற்றும் தேர்தல் கள முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான கண்டனப் பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், தேர்தல் பிரச்சாரக் களத்தில் தேடப்படும் குற்றவாளியுடன் முதலமைச்சர் ரேக்ளா உலா சென்றது, தேர்தல் பிரச்சாரத்தில் மாட்டு வண்டியைப் பயன்படுத்தி விலங்குகள் நல விதிமுறைகளை மீறியதாக எழுந்த புகார்கள், தாராபுரம் அதிமுக வேட்பாளரை முடக்குவதற்காக அவர் மீது திட்டமிட்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது மற்றும் வாக்காளர்களுக்கு டிபன் பாக்ஸ் மூலம் பணப்பட்டுவாடா செய்தது எனத் தேர்தல் தொடக்கம் முதலே ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகச் சர்ச்சைகள் வரிசைகட்டி நின்றன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: தாராபுரத்தில் தடுமாறும் அதிமுக..!! 2ம் இடமும் போச்சு..!! அசுர வேகத்தில் முன்னேறும் திமுக!!
தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந்துள்ள அதிர்ச்சி சம்பவங்களைப் பட்டியலிட்ட அவர், இதற்கெல்லாம் மேலாக, இன்று மதுராந்தகம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் 11, 71, 133, 169 ஆகிய வாக்குச்சாவடிகளின் EVM எந்திரங்கள் முற்றிலும் செயலிழந்ததாகவும், பல எந்திரங்களில் முறையான தேர்தல் ஆணையத்தின் சீல் இல்லை என்றும் எதிர்க்கட்சி முகவர்கள் பகிரங்கக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்; இதுகுறித்து விளக்கம் கேட்ட முகவர்களுக்குத் தேர்தல் அதிகாரிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்; இதனைத் தட்டிக்கேட்டு ஜனநாயக வழியில் போராடிய சுயேச்சை வேட்பாளர் டாக்டர் மூர்த்தி பலவந்தமாக வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்று வேதனை தெரிவித்துள்ளார்.
இறுதியாக, தேர்தல் களம் தொடங்கி வாக்கு எண்ணிக்கை வரை தொடர்ச்சியாக அரங்கேறி வரும் இத்தனை கடுமையான தேர்தல் முறைகேடுகளையும், அதிகார பலத்தையும் மீறி ஜனநாயகத்தின் மாண்பு எவ்வாறு வெல்லும் என்று அதிமுக வழக்கறிஞர் இன்பாதுரை மிகக் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக MLA-க்கள் ராஜினாமா வழக்கு..!! ஆப்சென்ட்டான நீதிபதி..!! இன்று தீர்ப்பு இல்லை..!!