ரவுடிகள் அட்டகாசம்… திரும்பி பாருங்க உங்க கட்சிக்காரர் தான்! முதல்வரை சாடிய அண்ணாமலை
திமுக நிர்வாகி யூரியா லோடுகளை தடுத்து வைத்திருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
யூரியா தட்டுப்பாடு என முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கும் நிலையில், திமுகவினர் யூரியா தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தின் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்குக் கொண்டு செல்வதற்காக, 1,350 டன் யூரியா, குஜராத்திலிருந்து சரக்கு ரயிலில் கொண்டு வரப்பட்டதாகவும், இந்த யூரியா, மதுரை கூடல்புதூர் பகுதியில் உள் குட்ஷெட்டிற்கு வந்தடைந்த நிலையில், திமுக வட்டச் செயலாளராக உள்ள செந்தில் என்பவர், லோடுமேன்களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு யூரியா மூட்டைகளை லாரிகளில் ஏற்றவிடாமல் தடுத்து வைத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
மாலை 6 மணிக்கு முன்பாக லோடு ஏற்றினால், ரூபாய் 100 கூலியும், 6 மணிக்கு மேல் லோடு ஏற்றினால், ரூபாய் 300 கூலியும் வழங்கப்பட வேண்டும். லோடுமேன் கூலியில் அதிகம் கமிஷன் வாங்குவதற்காக, இந்த திமுக வட்டச் செயலாளர் செந்தில், மாலை 4 மணிக்கே வந்த யூரியா மூட்டைகளை ஏற்ற விடாமல், லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் என அனைவரையும் அலைக்கழிக்கும் வகையில் ரவுடிகளை வைத்து, லோடுமேன்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக தெரிவித்தார்.
இதனால், தென்மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய 1350 டன் யூரியா மூட்டைகள் மதுரை குட்ஷெட்டில் தேங்கிக் கிடப்பதாகவும், இதனால் லாரி உரிமையாளர்களுக்கு, நாள்தோறும் 2 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
இதையும் படிங்க: TTV வெளியேற நான் காரணமில்ல! ஆனா... மனம் திறந்த நயினார்
தமிழகத்தில் யூரியா தட்டுப்பாடு இருப்பதாக மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி நாடகமாடி இருப்பதாகவும், மற்றொரு புறம், மதுரையை வந்தடைந்த யூரியா மூட்டைகளை, தென்மாவட்டங்களுக்குக் கொண்டு செல்ல விடாமல், அவரது கட்சிக்காரர் தடங்கல் ஏற்படுத்திக் கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார். இதனால் பாதிக்கப்படுவது, தென்மாவட்ட விவசாயிகளே என்றும் உடனடியாக, யூரியா மூட்டைகளை தென் மாவட்டங்களுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், பொதுமக்களுக்குத் தொடர்ந்து இடைஞ்சலாக நடந்து கொள்ளும் தனது கட்சியினரை, முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரித்து கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: சாறு அவங்களுக்கு... சக்கை எங்களுக்கா? ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு! பகீர் கிளப்பிய அழகிரி