×
 

தலைமைச் செயலகத்தில் குவியும் த.வெ.க.வினர்... அமைச்சர்கள் அறைகளில் தள்ளுமுள்ளு?

தலைமை செயலகத்தில் திரளும் த.வெ.க.,வினரால், அமைச்சர்களின் அறைகளில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுவருகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நாளுக்கு நாள் த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களின் வருகை அதிகரித்து வருவதால், அமைச்சர்கள் அலுவலகங்கள் மற்றும் வளாகத்தில் கடும் கூட்ட நெரிசல் நிலவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர்களை நேரில் சந்தித்து மனுக்கள் அளிப்பது, கோரிக்கைகளை முன்வைப்பது மற்றும் கட்சி தொடர்பான பணிகளை மேற்கொள்வது ஆகிய காரணங்களால் தினமும் ஏராளமானோர் தலைமைச் செயலகத்திற்கு வருவதாக கூறப்படுகிறது.

மே 10-ஆம் தேதி த.வெ.க. அரசு பொறுப்பேற்ற நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் மத்தியில் அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் தங்கள் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களை பேருந்து, ரயில் மற்றும் தனியார் வாகனங்களில் சென்னை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் அமைச்சர்களிடம் நேரடியாக மனு அளித்தால், பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவாக நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் பலர் சென்னை வருவதாக கூறப்படுகிறது. அதேபோல், அமைச்சர்களை நேரில் சந்தித்து உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைகள், கட்சி பொறுப்புகள் மற்றும் நிர்வாக விவகாரங்கள் குறித்தும் பலர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.

இதையும் படிங்க: சிறைக்குள் சபரி வர்மனுக்கு நடந்தது என்ன..? யார் பொறுப்பு..? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

இதன் காரணமாக, காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குப் பிறகும் தலைமைச் செயலக வளாகத்தில் மக்கள் கூட்டம் நீடித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அமைச்சர்களின் அலுவலகங்களுக்கு வெளியே அதிகளவில் மக்கள் காத்திருப்பதால், சில நேரங்களில் தள்ளுமுள்ளு ஏற்படும் சூழலும் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைமைச் செயலகத்திற்கு எதிரே உள்ள வாகன நிறுத்துமிடத்திலும் நெரிசல் அதிகரித்துள்ளது. அங்கு வரும் சிலர் தங்களது வாகனங்களை ஒழுங்கின்றி நிறுத்திச் செல்வதால், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தங்களது வாகனங்களை வெளியே எடுக்க சிரமப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையை சீரமைக்கும் வகையில், மாவட்ட அளவிலேயே அமைச்சர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்களை நடத்தலாம் என்றும், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அளிக்க எம்.எல்.ஏ. அலுவலகங்களில் செயல்படும் இ-சேவை மையங்களை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்த அனுமதிக்கலாம் என்றும் தலைமைச் செயலக அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

இதையும் படிங்க: இதுக்கு ஒரு என்டே இல்லையா?... இரவோடு இரவாக தெருவில் இறங்கிய மக்கள்... விஜய் ஆட்சிக்கு சிக்கல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share