×
 

ஈரான் மீது அமெரிக்கா அட்டாக்..!! பதிலடியாக குவைத் மீது பாய்ந்த ஈரான் ஏவுகணைகள்..!!

குவைத் நாட்டில் அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்து இன்று அதிகாலை ஈரான், ஏவுகணை மற்றும் டிரோன்களை ஏவியுள்ளது.

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருந்த தற்காலிக போர் நிறுத்தம் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது பிராந்திய அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

முன்னதாக, ஈரான் தரப்பு அமெரிக்காவின் அதிநவீன MQ-1 ரீபர் டிரோனை சுட்டு வீழ்த்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று ஈரானின் கெருக் மற்றும் கெஷ்ம் தீவுப் பகுதிகளில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க மத்திய கட்டளை மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஈரானிய ரேடார் அமைப்புகள் மற்றும் டிரோன் ஏவுதளங்கள் மீது இலக்கு வைத்து துல்லியத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. 

சர்வதேச வான்வெளியில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க உளவு டிரோனை ஈரான் அத்துமீறி சுட்டு வீழ்த்தியதற்கு இது பதிலடியாக நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை ஈரானின் இராணுவ திறன்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.

இதையும் படிங்க: ஈரானின் கச்சா எண்ணெய்யை வாங்கினால் இதுதான் நடக்கும்..!! அமெரிக்கா வார்னிங்..!!

ஈரான் உடனடியாக பதிலடி கொடுக்கத் தவறவில்லை. இன்று அதிகாலையில் குவைத் நாட்டில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தை குறிவைத்து ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவியது. இருப்பினும், குவைத் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் சிறப்பாகச் செயல்பட்டு, வான்வெளிக்குள் நுழைந்த அனைத்து ஈரானிய ஏவுகணைகள் மற்றும் டிரோன்களையும் நடுவானிலேயே அழித்ததாக குவைத் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சம்பவம் குவைத்தின் பாதுகாப்பு அமைப்புகளின் திறனை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

இதனிடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது ட்ரூத் சோஷியல் தளத்தில் ஒரு முக்கிய பதிவை வெளியிட்டுள்ளார். “ஈரான் உண்மையிலேயே ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது. அது அமெரிக்காவுக்கும், நம்முடன் இருப்பவர்களுக்கும் ஒரு நல்ல ஒப்பந்தமாக இருக்கும். அமைதியாகக் காத்திருந்து கவனியுங்கள். இறுதியில் எல்லாம் நன்றாக முடியும், எப்போதும் போல!” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த பதிவு இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்கான சாத்தியக்கூறுகளை மீண்டும் எழுப்பியுள்ளது. இந்த தொடர் மோதல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. சர்வதேச சமூகம் இப்போது இரு தரப்பினரும் அமைதி பாதையை நோக்கி நகர வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

இதையும் படிங்க: பந்தர் அப்பாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது ஈரான்! சின்னா பின்னமான அமெரிக்க படைத்தளம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share