திருக்கார்த்திகை தீபத் திருவிழா: மலை உச்சியை அடைந்த 300 கிலோ எடை கொண்ட மகா தீபக் கொப்பரை!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில், தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றப்படுவதற்காக, சுமார் 300 கிலோ எடையுள்ள தீபக் கொப்பரை இன்று மலை உச்சியை அடைந்தது.
உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தத் திருவிழாவின் சிகர விழாவான திருக்கார்த்திகை தீபத் திருவிழா நாளை அதிகாலை அண்ணாமலையார் கருவறை முன்பு அதிகாலை 4 மணியளவில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணி அளவில் கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
மகா தீபத்திற்குப் பயன்படுத்தப்படும் இந்தக் கொப்பரை 5 3/4 அடி உயரம் மற்றும் 300 கிலோ எடையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்டு ஆயிரம் கால் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த இந்தக் கொப்பரைக்கு, இன்று அதிகாலை கிளி கோபுரம் மற்றும் நந்தி பகவான் முன்பு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: Breaking: திருவண்ணாமலை தீபத் திருவிழா: நகருக்குள் இருசக்கர வாகனங்களுக்குத் தடை!
அதைத் தொடர்ந்து, இன்று காலை 6 மணியளவில் 30க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள் கொப்பரையைத் தோளில் சுமந்துகொண்டு, கோயில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட தீபமலை மீது ஏறும் பணியைத் தொடங்கினர். தற்போது, அந்தக் கொப்பரை வெற்றிகரமாக மலை உச்சியை அடைந்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம், நாளை (டிசம்பர் 3) அதிகாலை 4 மணியளவில் அண்ணாமலையார் கருவறை முன்பு ஏற்றப்பட உள்ளது. நாளை மாலை சரியாக 6 மணிக்கு மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக, நாளைக் காலைத் தீபம் ஏற்றப் பயன்படும் 1500 மீட்டர் காடா துணி மற்றும் நெய் உள்ளிட்ட பொருட்கள் மலை மீது கொண்டு செல்லப்படும்.
நாளை மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் இந்த மகா தீபம், தொடர்ந்து 11 நாட்களுக்குத் தீபமலையில் இருந்து ஜோதிப்பிழம்பாய் பக்தர்களுக்குக் காட்சி அளிப்பார் அண்ணாமலையார். நினைத்தாலே முக்தி தரும் இந்தத் திருத்தலத்திற்குப் பக்தர்கள் இன்று முதலே குவியத் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்!