உடல்நலம் தேறி வருகிறேன், விரைவில் களத்திற்குத் திரும்புவேன்! வானதி சீனிவாசன் உருக்கமான வீடியோ!
கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வெளியிட்ட உருக்கமான பதிவு; ஓரிரு நாட்களில் தேர்தல் பிரசாரத்திற்குத் திரும்புவதாக உறுதி.
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பாஜக வேட்பாளரும், தேசிய மகளிர் அணித் தலைவருமான வானதி சீனிவாசன், தனது உடல்நிலை குறித்து நிலவிய கவலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கடும் தேர்தல் பணி மற்றும் அலைச்சல் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட அதீத சோர்வு மற்றும் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக, வானதி சீனிவாசன் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்த மருத்துவர்கள், அவருக்குச் சில பரிசோதனைகளை மேற்கொண்டனர். தற்போது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூழலில் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள வீடியோவில்: தற்போது உடல்நலம் நன்றாகத் தேறி வருகிறது. மருத்துவர்கள் எனக்குச் சிறந்த சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் முழுமையாகக் குணமடைந்து மீண்டும் நேரடியாகத் தேர்தல் களத்திற்கு வந்து உங்களைச் சந்திப்பேன் எனத் தொண்டர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.
இதையும் படிங்க: #Breaking News: வானதி சீனிவாசன் திடீர் உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி!
வானதி சீனிவாசனின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர் குறைந்தது 4 நாட்கள் முழுமையான ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும், தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில் வீடு திரும்ப அவர் ஆர்வம் காட்டி வருகிறார்.
வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் கோவை வடக்குத் தொகுதி பாஜகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் சற்றுத் தொய்வடைந்திருந்தனர். ஆனால், வானதி சீனிவாசன் நேரடியாகப் பேசி வெளியிட்டுள்ள இந்த வீடியோ செய்தியால், தொண்டர்கள் மீண்டும் உற்சாகத்துடன் தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளனர்.
வாக்குப்பதிவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வானதி சீனிவாசன் மீண்டும் களத்திற்கு வருவது கோவை வடக்கு தொகுதியில் மும்முனைப் போட்டியை மேலும் சூடுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திமுக என்றால் டிபார்ட்மெண்டல் கட்சி! ஸ்டாலினின் தேர்தல் அறிக்கையை விளாசிய வானதி சீனிவாசன்!