"முதியோர்கள் பாதுகாப்பில் கோட்டை விடும் தவெக அரசு": வானதி சீனிவாசன் சரமாரி குற்றச்சாட்டு!
தமிழகத்தில் மூத்த குடிமக்கள் பாதுகாப்பில் தவெக அரசு மெத்தனமாகச் செயல்படுவதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் மூத்த குடிமக்களின் பாதுகாப்பில் தவெக அரசு மெத்தனமாகச் செயல்பட்டு வருவதாகவும், நலத்திட்டங்களுடன் சேர்த்து அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான சிறப்புப் பாதுகாப்புத் திட்டங்களைத் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என்றும் பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கையில் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தனியாக வசித்து வந்த 85 வயது மூதாட்டி மர்ம நபரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் மனவேதனையையும் அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதைச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த வாரம் மட்டும் தலைநகர் சென்னையில் மூதாட்டி ஒருவர் நகைக்காகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், கோவையில் பெண் படுகொலை எனத் தொடர்ந்து பெண்கள் மற்றும் முதியோர்களைக் குறிவைத்து நடத்தப்படும் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவித்துள்ளார்.
இத்தகைய தொடர் குற்றங்கள் முதியோர்களின் பாதுகாப்பில் ஆளும் தவெக அரசு காட்டும் கடுமையான மெத்தனப் போக்கையே அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது எனச் சாடியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழக சட்டசபையில் நாளை வருவாய், பேரிடர் மற்றும் சுகாதார துறை மானிய கோரிக்கை விவாதம்!
தங்கள் வாழ்நாள் அனுபவங்களையும் நினைவுகளையும் சுமந்துகொண்டு முதுமைக் காலத்தில் அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டிய மூத்த குடிமக்கள், இன்று ஆதரவற்ற தனிமையிலும் எந்நேரமும் அச்சத்துடனுமே வாழும் அவல நிலைக்குத் தள்ளப்படுவது மிகுந்த வேதனைக்குரியது என்று தெரிவித்த வானதி சீனிவாசன், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் வழக்கமான நலத்திட்டங்களுடன் மட்டும் நின்றுவிடாமல், அவர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யும் பிரத்யேக சிறப்புத் திட்டங்களை உடனடியாக அரசு வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் முதியோர்களின் முதுமைக் காலத்தை அச்சமற்றதாகவும் மகிழ்ச்சியானதாகவும் மாற்ற குடும்பத்தினரும் அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: "தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தருவோம்": தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம் என அண்ணாமலை அதிரடி