×
 

கோவையில் மத்திய அமைச்சருடன் சந்திப்பு: ரூ.466.33 கோடி நிதி கோரிய விசிக தலைவர் திருமாவளவன்!

பழங்குடியினர் திட்டங்களுக்கு மத்திய அரசிடம் ரூ.466.33 கோடி நிதி கோரி அமைச்சர் ஜுவல் ஓரமிடம் தொல். திருமாவளவன் மற்றும் வன்னி அரசு மனு அளித்தனர்.

தமிழ்நாட்டில் பழங்குடியின மக்களின் கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படவுள்ள பல்வேறு புதிய திட்டங்களுக்கு மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.466.33 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரி மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜுவல் ஓரத்தை நேரில் சந்தித்து விரிவான மனு அளிக்கப்பட்டுள்ளது.

அரசு முறைப் பயணமாக கோவைக்கு வருகை தந்த மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜுவல் ஓரத்தை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆகியோர் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் போது, தமிழ்நாட்டில் வாழும் பழங்குடியின மக்களின் நலனை உறுதி செய்யும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து, சமூக நீதித்துறையின் சார்பில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை விரிவுபடுத்தவும், புதிய திட்டங்களைத் தொடங்கவும் மத்திய அரசின் முழுமையான நிதி ஆதரவைக் கோரி விரிவான மனு ஒன்று மத்திய அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ராகுல் காந்தி பிரதமராக தவெக விரும்புகிறது! சென்னை விமான நிலையத்தில் தொல். திருமாவளவன் பேட்டி!

குறிப்பாக, பழங்குடியின மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையிலான பள்ளி மற்றும் விடுதிக் கட்டடங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பழங்குடியின மக்களுக்குத் தரமான பாதுகாப்பான கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் திட்டங்களை முன்னெடுத்தல், அவர்களின் பொருளாதார தன்னிறைவை உறுதி செய்யும் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பழங்குடியினரின் தொன்மையான கலை, கலாச்சாரத்தைப் போற்றிப் பாதுகாக்கும் வகையில் நவீன 'பழங்குடியினர் பண்பாட்டு மையம்' அமைத்தல் ஆகிய ஆக்கப்பூர்வ பணிகளுக்காக மத்திய அரசிடமிருந்து ரூ.466.33 கோடி நிதியை விரைந்து விடுவிக்க வேண்டும் என அந்த மனுவில் அமைச்சர் வன்னி அரசு வலியுறுத்தியுள்ளார்.

மனுவைப் பெற்றுக்கொண்ட மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜுவல் ஓரம், தமிழ்நாடு அரசின் இக்கோரிக்கைகளை உரிய முறையில் பரிசீலித்துத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை முன்னெடுக்க ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார். இச்சந்திப்பு குறித்த விவரங்களைத் தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' சமூக வலைதளப் பக்கத்திலும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பகிர்ந்துள்ளார்.
 

இதையும் படிங்க: வேளாங்கண்ணியில் சாதிய வழக்கம்! அமைச்சர் மரிய வில்சன் மாற்றுவாரா என விசிக ரவிக்குமார் கேள்வி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share