விசிக நிர்வாகி கொலை வழக்கில் திருப்பம்... இரவோடு, இரவாக காவல்துறை எடுத்த அதிரடி முடிவு...!
விசிக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை தேடும் 4 தனிப்படைகள் அமைப்பு
கலவை அடுத்த நாகலேரி பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் சிவகுமார் (52), கலவை பஜார் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அல்லலச்சேரி அருகே வந்தபோது, அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் திடீரென இருசக்கர வாகனத்தை வழிமறித்து, கத்தியால் தலை மற்றும் முகத்தில் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த சிவகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவரது உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: தவெக ஆட்சிக்கு தற்போது ஆபத்தில்லை! ஆனா 5 வருசம் நீடிக்குமா? சிபிஎம் பாலகிருஷ்ணன் விமர்சனம்!
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை சிவகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆற்காடு–கலவை சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, சிவகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
விசிக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் கலவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருமாவளவனை வரவேற்க குவிந்த தொண்டர்கள்! மகளிர் கல்லூரிக்குள் நுழைய முயன்றதால் போலீசாருடன் தள்ளுமுள்ளு!