இனி வாகனங்கள் நிற்க தேவையில்லை..!! பரனூர் சுங்கச்சாவடியில் வந்தாச்சு புதிய நடைமுறை..!!
வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கதவு திறக்கும் வரை நேரத்தை வீணடித்தன. இப்போது அந்த நிலை மாறிவிட்டது.
செங்கல்பட்டு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (ஜி.எஸ்.டி. சாலை / என்.எச்-179பி தாம்பரம்-திண்டிவனம் பிரிவு) அமைந்துள்ள பரனூர் சுங்கச்சாவடியில் தமிழகத்திலேயே முதல்முறையாக முழு தானியங்கி, தடையற்ற சுங்கக் கட்டண வசூல் முறை அக்டோபர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
மல்டி-லேன் ஃப்ரீ ஃப்ளோ (MLFF) எனப்படும் இந்த அமைப்பு நாட்டின் சில சுங்கச்சாவடிகளுக்குப் பிறகு தென்னிந்தியாவிலும் தமிழகத்திலும் முதல் முயற்சியாகக் கருதப்படுகிறது. இதுவரை இந்த சுங்கச்சாவடி பண்டிகை காலங்களிலும் விசேஷ நாட்களிலும் கடும் போக்குவரத்து நெரிசலுக்குப் பெயர் பெற்றிருந்தது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கதவு திறக்கும் வரை நேரத்தை வீணடித்தன. இப்போது அந்த நிலை மாறிவிட்டது.
சுங்கச்சாவடிக்கு 50 முதல் 200 மீட்டர் தூரத்திற்கு முன்பே நவீன கேன்ட்ரிகளில் பொருத்தப்பட்ட RFID ரீடர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ANPR கேமராக்கள் வாகனத்தின் பாஸ்டேக் அட்டையையும் பதிவு எண்ணையும் ஒரே நேரத்தில் ஸ்கேன் செய்கின்றன. கட்டணம் உடனடியாக இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு வாகனங்கள் தடையின்றி செல்கின்றன. பூத்களோ, கதவுகளோ இனி தேவையில்லை.
இதையும் படிங்க: தொடர் விடுமுறை... சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்... ஸ்தம்பிக்கும் ஜிஎஸ்டி சாலை..!
பாஸ்டேக் கணக்கில் போதுமான இருப்பு இல்லாவிட்டாலும் வாகனம் நிறுத்தப்படாது. உரிமையாளருக்கு எஸ்எம்எஸ் மூலம் அறிவிப்பு அனுப்பப்படும். 72 மணி நேரத்திற்குள் ரீசார்ஜ் செய்து கட்டணம் செலுத்த வேண்டும். தாமதமானால் இரண்டு மடங்கு தொகை வசூலிக்கப்படும். தொடர்ந்து செலுத்தாதவர்களுக்கு அபராதம் குவியும். வாகனப் புதுப்பித்தல், தரச்சான்று பெறுதல், விற்பனை போன்ற பணிகள் தடைபடும். வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் முழுத் தொகையும் வசூலிக்கப்படும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், இந்த முறையால் முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படும். மத்திய அரசு அறிவித்துள்ள விலக்கு பெற்றவர்களைத் தவிர யாரும் இலவசமாகச் செல்ல முடியாது. போக்குவரத்து நேரம் குறையும், எரிபொருள் சேமிப்பு அதிகரிக்கும், மாசு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகன ஓட்டிகள் பாஸ்டேகை சரியாகப் பொருத்தி போதுமான இருப்பு வைத்திருப்பது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என்றென்றும் இருமொழிக் கொள்கையே..! சமரசம் கிடையாது... அமைச்சர் ஆதவ் திட்டவட்டம்..!!