×
 

வெள்ளியங்கிரி மலைக்கு படையெடுக்கும் பக்தர்கள்..!! வனத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் படையெடுப்பதால் வனத்துறையினர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகிய பகுதியான வெள்ளியங்கிரி மலைக்கு இந்த ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பக்தர்கள் ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் மே மாத இறுதி வரை (மே 31) இந்த மலை ஏறும் பயணம் தொடரும். இங்கு சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கும் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க உள்ளூர் மக்களுடன், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் வருகின்றனர்.

ஏழு மலைகளைக் கடந்து செல்லும் இந்தப் பயணம் ஆன்மீக அனுபவத்துடன் இயற்கையோடு இணைந்த ஒரு சவாலான பயணமாகும். எனவே, மலையின் சூழலைப் பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு என்பதை வலியுறுத்தி வருகிறது வனத்துறை. பக்தர்கள் மலையேறும் போது பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: திருப்பதிக்கு போறீங்களா..?? இனி இவங்களுக்கு தான் முன்னுரிமை..!! TTD சொன்ன குட் நியூஸ்..!!

மலை அடிவாரத்தில் 24 மணி நேரமும் கடுமையான சோதனை நடைபெறுகிறது. அத்தியாவசியமான குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு ரூ.20 அடகுத்தொகை வசூலிக்கப்பட்டு, மீண்டும் இறங்கும் போது திருப்பித் தரப்படுகிறது. இதன்மூலம் பாட்டில்கள் மலையில் கிடப்பதைத் தடுக்க முடிகிறது. மேலும், சாக்லெட், பிஸ்கட் போன்றவற்றின் பிளாஸ்டிக் கவர்களை பிரித்து, பொருட்களை மட்டும் அனுமதித்து கவர்களை பறிமுதல் செய்கின்றனர்.

மலையில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் கவர்களில் தின்பண்டங்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. மாற்றாக, பாலித்தீன் இல்லாத பொருட்கள் அல்லது மாற்று வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆறாவது மலையான ஆண்டிசுனையில் குளிக்கும் பக்தர்கள் ஆடைகளை அங்கேயே விட்டுச் செல்லாமல் எடுத்துச் செல்ல வேண்டும் என விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டுகளில் மலை மற்றும் அடிவாரத்தில் பறிமுதல் செய்யப்பட்டு அகற்றப்பட்ட பிளாஸ்டிக், துணி கழிவுகள் 28 டன் அளவுக்கு இருந்தன. அதற்கு முந்தைய ஆண்டு 18 டன் என அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. மரக்கன்றுகள் (வேம்பு, புங்கன், புளியமரம் உள்ளிட்டவை) நடுதல் அல்லது விதைப் பந்துகள் எடுத்துச் செல்லுதல் கூடாது எனவும் வலியுறுத்தப்படுகிறது. காட்டின் இயற்கை சமநிலையை மாற்றாமல் பாதுகாப்பதே மிக முக்கியம் என போளுவாம்பட்டி வனச்சரகர் தெரிவித்துள்ளார்.

பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக முதல் மற்றும் மூன்றாவது மலைகளில் மருத்துவக் குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மலை ஏறுபவர்கள் உடல் நிலைக்கு ஏற்ப பயணத்தைத் திட்டமிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளியங்கிரி மலை இயற்கை அழகும் ஆன்மீக சக்தியும் கொண்ட தலமாக விளங்குகிறது. இதைத் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் பராமரிப்பது ஒவ்வொரு பக்தரின் கடமையாகும். பிளாஸ்டிக் இல்லாத, கழிவு இல்லாத பயணத்தை மேற்கொண்டு, மலையின் அழகையும் தூய்மையையும் அடுத்த தலைமுறைக்கு காப்போம் என்பதே வனத்துறையின் வேண்டுகோள்.

இதையும் படிங்க: திருப்பதிக்கு போறீங்களா..?? இனி இவங்களுக்கு தான் முன்னுரிமை..!! TTD சொன்ன குட் நியூஸ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share