வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு! நாளை சென்னை கிண்டியில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்!
சென்னை கிண்டியில் நாளை முதலமைச்சர் விஜய் முன்னிலையில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026 நடைபெறவுள்ளது.
மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், 'வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026' (Vettri Tamil Nadu Investment Conclave 2026) நாளை (13.08.2026) சென்னை கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், உலகளாவிய தொழிலதிபர் பெருமக்கள், சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் துறை தலைவர்கள் பலர் நேரடியாகப் பங்கேற்கவுள்ளனர்.
Ideas. Investment. Industry. Impact. என்ற உயரிய கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ள இம்மாநாடு, தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் தொலைநோக்குப் பார்வையுடன் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நெசவாளர்களுக்கு புதிய கதவு! தேசிய கைத்தறி நாளில் 'வெற்றித் தறி' திட்டத்தை தொடங்கிவைத்தார் முதலமைச்சர் விஜய்!
முதலமைச்சர் விஜய் முன்னிலையில், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களுடன் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகவுள்ளன.
இந்த மாநாட்டின் மூலம் மேற்கொள்ளப்படும் தொழில் முதலீடுகள் வாயிலாகத் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குப் பல ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்துறை மாற்றங்களை முன்னெடுக்கும் முக்கிய நிர்வாகிகளை ஒரே தளத்தில் இணைத்துத் தமிழ்நாட்டைத் தெற்காசியாவின் முதன்மைத் தொழில் மையமாக மாற்றுவதே இம்மாநாட்டின் பிரதான நோக்கமாகும்.
எங்கே தொலைநோக்குப் பார்வை உள்ளதோ, அங்கே வெற்றி சாத்தியமாகும் என்ற முழக்கத்துடன் நாளை நடைபெறும் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026, தமிழகத் தொழில் துறையில் புதிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஜோசப் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!