த.வெ.க. ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் சிக்கல்!! சட்ட நிபுணர்களுடன் விஜய் ஆலோசனை!
தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழக அரசியலில் ஆட்சியமைப்பை சுற்றிய பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் சட்ட நிபுணர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றியிருந்தும் ஆட்சி அமைக்க ஆளுநர் இன்னும் அழைப்பு விடுக்காத சூழலில், இந்த ஆலோசனைக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், தெளிவான பெரும்பான்மை எண் எட்டப்படாததால் ஆட்சியமைப்பில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், ஆளுநர் இதுவரை அதிகாரப்பூர்வ அழைப்பை வழங்காதது அரசியல் வட்டாரங்களில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த நிலையில், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க விஜய் தனது நெருங்கிய நிர்வாகிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் முக்கிய கூட்டம் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டத்தில் தவெக முக்கிய நிர்வாகிகளான ஆனந்த், ஆதவ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிங்க: ஆட்சி அமைக்க அனுமதியுங்கள்!! விஜய்க்கு பெருகும் ஆதரவு!! கவர்னருக்கு வலுக்கும் கண்டனம்!
அரசியல் மற்றும் சட்ட ரீதியாக எந்த வழிமுறைகளை மேற்கொள்ளலாம், ஆளுநரின் முடிவுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமா, அல்லது சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு கோரி மீண்டும் மனு அளிக்க வேண்டுமா என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், விஜய்க்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தனிப்பெரும் கட்சியாக மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
விஜய் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆளுநரை சந்தித்த பிறகும் தெளிவான முடிவு வெளியாகாததால், தவெக தரப்பில் அதிருப்தி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த சில நாட்களில் தமிழக அரசியலில் மேலும் பரபரப்பான திருப்பங்கள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தவெக சட்ட ரீதியான அடுத்தகட்ட நகர்வு என்ன, ஆளுநரின் முடிவு எப்படி இருக்கும் என்பதையே தற்போது தமிழக அரசியல் வட்டாரம் முழுவதும் கவனித்து வருகிறது.
இதையும் படிங்க: விஜய் சீக்கிரமே ஆட்சி அமைப்பார்! தவெக ஆட்சி அமையும்!! முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ரங்கசாமி உறுதி!