ஈசிஆர் சரவணனின் அராஜகம்..! கதறும் பெண் தவெக நிர்வாகி... நடவடிக்கை எடுப்பாரா சி.எம்.சார்?
தவெக கட்சியைச் சேர்ந்த சில நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீது தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
“இந்த விஜய் தப்பு செய்ய மாட்டான்; தப்பு செய்யவும் விட மாட்டான். அது யாராக இருந்தாலும் சரி. என்னுடைய அரசில், என்னுடன் இருப்பவர்களாக இருந்தாலும் தவறு செய்தால் விடமாட்டேன்” என்று திரைப்பட பாணியில் அதிரடி வசனங்களுடன் முதலமைச்சர் விஜய் பல்வேறு மேடைகளில் பேசியுள்ளார்.
மேலும், “தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம், இனி எதுவும் செய்யலாம் என்ற எண்ணம் யாருக்காவது இருந்தால், அந்த எண்ணத்தை இப்போதே மனதிலிருந்து அகற்றிக் கொள்ளுங்கள்” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், தவெக கட்சியைச் சேர்ந்த சில நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீது தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரே நாளில் 10 பாலியல் கொடூரங்கள்... என்ன CM சார்..? ஏதாச்சும் பேசுங்க... நயினார் ஆவேசம்..!!
அந்த வகையில், தவெகவைச் சேர்ந்த வைதேகி என்பவர், சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈசிஆர் சரவணன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவரது குற்றச்சாட்டின்படி, கட்சிப் பொறுப்புகள் பணம் வழங்குபவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாக கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ஈசிஆர் சரவணனை நேரடியாக தொடர்புகொள்வது மிகவும் சிரமமாக இருப்பதாகவும், அவருக்கு தொலைபேசியில் அழைத்தால் வேறு ஒருவர் பதிலளித்து, “எம்எல்ஏ பிஸியாக உள்ளார்” என்று கூறி அழைப்பை துண்டித்து விடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை சுட்டிக்காட்டி, சொந்தக் கட்சி நிர்வாகிகளுக்கே சட்டமன்ற உறுப்பினர்களை எளிதில் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில், பொதுமக்களின் குறைகளை அவர்கள் எவ்வாறு நேரடியாக கேட்டு தீர்வு காண்பார்கள் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
மேலும், முதலமைச்சரை சந்திப்பதற்கே பல்வேறு பாதுகாப்பு வளையங்கள் உள்ள சூழலில், கீழ்மட்ட நிர்வாகிகளும் அதே நடைமுறையை பின்பற்றுகிறார்களா என்ற விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
அதேபோல், “தவெக கட்சி ரீல்ஸ் கட்சி என்ற பெயரை பெற்றுக் கொடுத்ததே சோழிங்கநல்லூர் தொகுதிதான்” என்று தவெக நிர்வாகி ஒருவர் கூறியதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதனையடுத்து, “பணத்தின் மீது ஆசை இல்லை” என்று பல்வேறு மேடைகளில் கட்சித் தலைமையினர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், கட்சிக்குள் பதவிகளுக்காக பணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தலைமையின் கவனத்திற்கு வந்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக கட்சித் தலைமை அல்லது சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: "டயலாக் பேசும் டம்மி முதல்வரே"..! கோவையில் கிடந்த பெண் சடலம்... தவெக அரசை விளாசிய திமுக..!