சட்டசபையில் முதல்வர் விஜய் - உதயநிதி பனிப்போர்? முகம் பார்க்காமல்... வணக்கம் வைக்காமல் தவிர்ப்பு
முதல்வர் விஜய் வணக்கம் தெரிவித்தபோது, உதயநிதி முகத்தை வேறு பக்கம் திருப்பியதாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் பேசுபொருளாகியுள்ளன.
தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையே நடைபெற்றதாக கூறப்படும் வணக்கம் தொடர்பான காட்சி தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. முதல்வர் விஜய் வணக்கம் தெரிவித்தபோது, உதயநிதி முகத்தை வேறு பக்கம் திருப்பியதாக கூறப்படும் இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் பேசுபொருளாகியுள்ளன.
தவெக அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 5-ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அன்றைய தினம் சட்டசபைக்கு முதல்வர் விஜய் வந்தபோது, அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மேஜையைத் தட்டி வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சபைக்கு வந்தார். அவரை திமுக எம்.எல்.ஏ.க்கள் மேஜையைத் தட்டி வரவேற்றனர்.
அப்போது உதயநிதியை நோக்கி முதல்வர் விஜய் வணக்கம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், உதயநிதி அந்த வணக்கத்திற்கு பதிலளிக்காமல் வேறு பக்கம் திரும்பியதாகவும், பின்னர் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் வணக்கம் தெரிவித்துவிட்டு தனது இருக்கையில் அமர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை கவனித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் நேரு, முதல்வர் விஜயை நோக்கி வணக்கம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் கேட்ட ஒற்றை கேள்வி... அதிரி புதிரியான சட்டப்பேரவை... சபாநாயகர் கொடுத்த வார்னிங்...!
இதற்கிடையே, ஆகஸ்ட் 6-ம் தேதி சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. காலை 9.30 மணிக்கு சபை நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பாக உதயநிதி தனது இருக்கையில் வந்து அமர்ந்திருந்தார். பின்னர் சபைக்கு வந்த முதல்வர் விஜய், நேராக தனது இருக்கைக்குச் செல்லாமல் சபையின் மையப்பகுதி வரை சென்று ஆளும் மற்றும் எதிர்க்கட்சி வரிசைகளில் இருந்த உறுப்பினர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.
முன்வரிசையில் அமர்ந்திருந்த சட்டசபை கட்சித் தலைவர்களும் எழுந்து முதல்வருக்கு வணக்கம் தெரிவித்தனர். பின்னர் விஜய் தனது இருக்கைக்குச் சென்றார். அப்போது உதயநிதி பக்கம் அவர் பார்க்காமல் சென்றதாகவும், உதயநிதியும் முதல்வருக்கு வணக்கம் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும், சட்டசபைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்தபோது, அவருக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்கள் மட்டும் மேஜையைத் தட்டி வரவேற்றனர். முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அமைதியாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டசபையில் சில திமுக எம்.எல்.ஏ.க்களின் இருக்கைகளும் மாற்றப்பட்டிருந்தன. முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அமர்ந்திருந்த இடம் எம்.எல்.ஏ. செந்தில்குமாருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதேபோல் முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் சேகர்பாபி அருகருகே அமருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
வேளாண் பட்ஜெட் தாக்கல் முடிந்த பிறகு அமைச்சர் வினோத்தை சந்திக்க முதல்வர் விஜயை நோக்கி வேகமாக வந்ததாகவும், அதற்குள் முதல்வர் புறப்பட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. சட்டசபையில் அடுத்தடுத்து நடந்த இந்த காட்சிகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: தவெக செய்தித் தொடர்பாளர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு முக்கிய பதவி! சிறுபான்மையினர் ஆணைய தலைவராக நியமனம்