10 நாள் கழித்து இதுதேவையா? - கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்துடன் வீடியோ காலில் 10 நிமிஷம் பேசிய விஜய்...!
தவெக தலைவர் விஜய் உயிரிழந்த குடும்பத்தினரிடம் வீடியோ காலில் பேசியுள்ளார்.
கடந்த 27ஆம் தேதி கரூரில் நடந்த விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். சம்பவம் நடைபெற்று 10 தினங்கள் ஆகிய நிலையில் , உயிரிழந்த 21 குடும்பத்தினரிடம் நேற்று விஜய் வீடியோ கால் மூலம் பேசினார். விஜய் பேசும் பொழுது கூடிய விரைவில் உங்களை நேரில் சந்திப்பேன் என தெரிவித்துள்ளார்.
இதில் கரூர் மாவட்டம் செங்கல் பகுதியை சேர்ந்த தனுஷ் குமார் என்பவர் உயிரிழந்து விட்டார். இவரது அம்மா உமா மகேஸ்வரி மற்றும் தங்கை ஹர்ஷினி ஆகியோரிடம் பேசிய விஜய், ஹர்ஷினியிடம் அண்ணன் இல்லை என்று கவலைப்பட வேண்டாம் உனக்கு நான் அண்ணனாக இருந்து எல்லா உதவிகளும் செய்வேன் என உறுதி அளித்துள்ளார்.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி தொண்டர்கள் ஒவ்வொருவராக மயக்கமடைய ஆரம்பித்த போதும் விஜய் தனது உரையை நிறுத்தவில்லை, மருத்துவமனையில் அடுத்தடுத்து உயிரிழப்புகள் குறித்த செய்தி வெளியாகி வந்த போதும், விஜய் சத்தமே இல்லாமல் சென்னை கிளம்பிச் சென்றார், கொஞ்சம் கூட வருத்தமே முகத்தில் தெரியாத அளவிற்கு வீடியோ வெளியிட்டு வேதனை தெரிவித்தார் என்றெல்லாம் விஜய் மீது அடுக்கடுக்கான புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக கரூர் கூட்ட நெரிசலால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களை 10 நாட்களாகியும் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லாதது பெரும் சர்ச்சையாக நீடித்து வருகிறது. சம்பவம் நடந்த மறுநாளே தமிழக முதலமைச்சர் முதல் எதிர்க்கட்சித் தலைவர்கள் வரை கரூரில் குவிந்த நிலையில், யாரை பார்க்கச் சென்று மக்கள் உயிரை விட்டார்களோ அந்த விஜய் களத்திற்கு வரவில்லை, மக்களை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நீடித்து வருகிறது. இந்நிலையில், சம்பவம் நடந்து 10 நாட்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை விஜய் வீடியோ காலில் சந்தித்து பேசியுள்ளதும் கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: கரூர் துயரச் சம்பம்... விஜய்க்கு சைலண்ட்டாக புத்தி புகட்டிய கமல் ஹாசன்...!