உதிரும் இலைகள்...சனிக்கிழமை காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்.... அதிமுகவை சல்லி சல்லியாய் நொறுக்கும் விஜய்...!
அதிமுகவின் முக்கிய தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலர் அடுத்தடுத்து கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கடும் பின்னடைவை சந்தித்தது. வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற அந்தக் கட்சி, கடந்த முறை வகித்த எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் இழந்தது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதிலிருந்து கட்சி தொடர்ந்து தேர்தல் தோல்விகளை சந்தித்து வருவதற்கு அவரே காரணம் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்து, பலர் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.
கடந்த மே 13ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: தொழிலாளர் கொள்கை எங்கே? ஆளுநர் உரையில் உழைப்பாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக சிஐடியு அதிருப்தி!
இதனைத் தொடர்ந்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அந்த 25 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் மனு அளித்தார். இதுவே தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி சலசலப்பின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையில், மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்தியபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இந்த நடவடிக்கை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரும் அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியும் காலியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அதிமுகவின் முக்கிய தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலர் அடுத்தடுத்து கட்சியை விட்டு வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். தற்போது மாநிலத்தில் மொத்தம் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளன. ராஜினாமா செய்துள்ள விஜயபாஸ்கர் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், அதிமுகவின் அடிப்படை கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்கிறார் என்று அதிருப்தி அணியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக, "திமுக ஆதரவுடன் முதலமைச்சராக முடியும்" என எடப்பாடி பழனிசாமி சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில் பேசியதாகக் கூறப்படும் தகவலே தமக்கு அதிர்ச்சியளித்ததாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தனது மகன் மிதுன் பழனிசாமி அரசியலுக்கு வருவார் என்ற தகவல்களை மறுத்து, "எனது மகன் கட்சியின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே உள்ளார். அவர் அரசியலுக்கு வரமாட்டார்" என்று எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அரசியல் விமர்சகரும் மூத்த பத்திரிகையாளருமான சுபேர் கூறுகையில், அதிமுக தற்போது கடுமையான சோர்வு நிலையை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
"அதிமுக தனது வரலாற்றில் இதுபோன்ற தொடர் தோல்விகளை சந்தித்ததில்லை. 1991-ல் வெற்றி, 1996-ல் தோல்வி, 2001-ல் மீண்டும் ஆட்சி, 2006-ல் தோல்வி, 2011-ல் மீண்டும் ஆட்சி என வெற்றி, தோல்வி மாறிமாறி வந்துள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான காலகட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என தொடர்ச்சியான தோல்விகளை கட்சி சந்தித்துள்ளது. இதனால் தலைமை மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது" என்றார்.
மேலும், "கட்சியை விட்டு வெளியேறும் தலைவர்கள் அதற்கான காரணங்களை முன்வைக்கின்றனர். திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாகவும், மிதுன் பழனிசாமியை கட்சியில் முக்கிய பொறுப்புக்கு கொண்டு வர முயற்சி நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே எடப்பாடி பழனிசாமி தனது மகன் அரசியலுக்கு வரமாட்டார் என்று தெளிவுபடுத்தியுள்ளார்" என்றார்.
ஆனால், இந்த விளக்கம் மட்டுமே கட்சியில் நிலவும் அதிருப்திக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், கட்சியை விட்டு வெளியேறும் தலைவர்கள் தங்களது அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே முடிவெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
"விஜயபாஸ்கர் போன்ற தலைவர்களுக்கு தனிப்பட்ட செல்வாக்கும் ஆதரவாளர்களும் உள்ளனர். தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் சூழலில், தங்களது ஆதரவாளர்களின் அரசியல் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அவர்கள் புதிய அரசியல் பாதையைத் தேர்வு செய்கின்றனர். தமிழக வெற்றிக் கழகம் எதிர்காலத்தில் வலுவான அரசியல் சக்தியாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் உள்ளது" என்றும் சுபேர் தெரிவித்தார்.
இதனால், அதிமுகவில் தற்போது நிலவும் உள்கட்சி அதிருப்தி மற்றும் தலைவர்களின் தொடர்ச்சியான வெளியேற்றம் கட்சித் தலைமையினருக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
இதையும் படிங்க: கட்சியை விட்டு நீக்கிட்டா போதுமா..? ஒழுக்கத்தை கத்துக்கொடுங்க CM..! நயினார் தாக்கு..!