ஜனநாயகன் சென்சார் சர்ட்டிபிகேட்!! ஓயாத பிரச்னை!! ஜனவரி 19-ல் சுப்ரீம்கோர்ட் விசாரணை!
விஜயின் கடைசி படமான ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ் தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 19ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான 'ஜனநாயகன்' தணிக்கை சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட சிக்கலால், படத்தின் வெளியீடு தள்ளிப்போய் உள்ளது. இந்த விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
கடந்த ஜனவரி 9-ஆம் தேதி திரைக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படத்திற்கு திரைப்பட தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்தது. இதையடுத்து தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. தனி நீதிபதி பி.டி. ஆஷா அமர்வு, தணிக்கை வாரிய உறுப்பினர்களின் பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக திரைப்பட தணிக்கை வாரியம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் வழக்கை ஜனவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: என்ன பாத்தா அரசுக்கு பயமா? போராடும் ஆசிரியர்களை ஒடுக்குவது தான் உங்க மாடலா... கிழித்து தொங்கவிட்ட சீமான்..!
இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால் ஆரம்பத்தில் சில பிழைகள் இருந்ததால் வழக்கு எண் கிடைக்கவில்லை. இப்போது அனைத்து பிழைகளும் திருத்தப்பட்டதால் வழக்கிற்கு எண் ஒதுக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் வெளியிடப்பட்ட உத்தேச விசாரணைப் பட்டியலின்படி, 'ஜனநாயகன்' படத்திற்கான தணிக்கை சான்றிதழ் மேல்முறையீட்டு மனு ஜனவரி 19-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
இதற்கிடையே திரைப்பட தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் “எங்கள் தரப்பு கருத்துக்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' வெளியீட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், இந்த வழக்கின் முடிவு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நான் சுட்டிப்பையன்… கொட்டும் மழையில் மாணவர்களுடன் கலகலப்பாக கலந்துரையாடிய ராகுல் காந்தி…!