×
 

திருப்பூர்காரங்களே.. இத நோட் பண்ணிக்கோங்க..!! நாளை விநாயகர் சிலை ஊர்வலம்.. போக்குவரத்து மாற்றம்..!!

விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி திருப்பூரில் நாளை (சனிக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகரில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 27ம் தேதி அன்று பக்தி பரவசத்துடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் அவதார தினமான இந்நாளில், திருப்பூரில் உள்ள கோயில்களும், வீடுகளும், பொது இடங்களும் வண்ணமயமான அலங்காரங்களுடன் ஜொலித்தன. 

திருப்பூரின் முக்கிய கோயில்களான பழைய விநாயகர் கோயில், அன்னூர் விநாயகர் கோயில் உள்ளிட்டவை பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. பக்தர்கள் அதிகாலையில் எழுந்து, வீடுகளை மாவிலை தோரணங்களால் அலங்கரித்து, களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை வைத்து பூஜைகள் செய்தனர். மோதகம், கொழுக்கட்டை, பாலகடலை சுண்டல் போன்ற நைவேத்தியங்கள் படைக்கப்பட்டு, அருகம்புல், எருக்கம்பூ மாலைகளால் விநாயகர் அலங்கரிக்கப்பட்டார். சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்டு, பலர் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட களிமண் சிலைகளைப் பயன்படுத்தினர்.

இதையும் படிங்க: 79வது சுதந்திர தின விழா ஒத்திகை.. சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்..!

நகரின் முக்கிய பகுதிகளில் பொது விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு, பக்தி கீர்த்தனைகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள், சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், பக்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்றன. திருப்பூர் மாநகரில் 750-க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பதற்காக நாளை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட உள்ளது. எனவே விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி திருப்பூரில் நாளை (சனிக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் விடுத்துள்ள அறிவிப்பில், "விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி நாளை காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை அனைத்து கனரக சரக்கு வாகனங்களும் மாநகருக்குள் வர தடை செய்யப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையத்துக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் தேவைக்கேற்ப மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பழைய வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக சந்திப்பு மற்றும் 60 அடி சாலையில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும். 60 அடி சாலை தற்காலிக பேருந்து நிலையமாக செயல்படும்.

பெருமாநல்லூரிலிருந்து புதிய பேருந்து நிலையத்துக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் தேவைக்கேற்ப மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை போயம்பாளையத்தில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும். போயம்பாளையம் தற்காலிக பேருந்து நிலையமாக செயல்படும். பழைய பேருந்து நிலையத்திலிருந்து பெருமாநல்லூர் செல்லும் பேருந்துகள் மற்றும் அனைத்து வாகனங்களும் தேவைக்கேற்ப அவினாசி சாலை வழியாக திருமுருகன்பூண்டி, பூலுவப்பட்டி நால்ரோடு வழியாக செல்லலாம். பெருமாநல்லூரிலிருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு செல்லும் அனைத்து வாகனங்களும் பூலுவப்பட்டி, நெருப்பெரிச்சல், ஊத்துக்குளி நால்ரோடு வழியாக பழைய பேருந்து நிலையம் சென்றடையலாம்.

அவினாசியிலிருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு செல்லும் அனைத்து வாகனங்களும் திருமுருகன்பூண்டி, பூலுவப்பட்டி, நெருப்பெரிச்சல், ஊத்துக்குளி நால்ரோடு வழியாக பழைய பேருந்து நிலையத்துக்கு செல்லலாம். பழைய பேருந்து நிலையத்திலிருந்து அவினாசி மற்றும் புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் வாகனங்கள் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ராஜீவ்நகர் சிக்னல், செல்லாண்டி அம்மன்துறை, மின் மயானம், ஊத்துக்குளி ரோடு, தலைமை தபால் நிலையம், புஷ்பா சந்திப்பு, அவினாசி ரோடு வழியாக செல்லலாம். 

காங்கயம் ரோடு, நல்லூரிலிருந்து திருப்பூர் நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் முத்தனம்பாளையம் நால்ரோடு, கோவில்வழி, வீரபாண்டி பிரிவு, பல்லடம் ரோடு வழியாக மாற்றுப்பாதையில் செல்லலாம். பல்லடம் சாலையிலிருந்து தாராபுரம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் வீரபாண்டி பிரிவு, காளிகுமாரசாமி கோவில், பிள்ளையார் நகர், கோவில்வழி வழியாக மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை மாற்றுப்பாதையில் செல்லலாம்.

பல்லடம் சாலையிலிருந்து அவினாசி வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் வீரபாண்டி பிரிவு, பலவஞ்சிபாளையம், கோவில்வழி, காங்கயம் ரோடு வழியாக நல்லூர், காசிபாளையம் சோதனை சாவடி, கூலிபாளையம், வீரபாண்டி பிரிவு வழியாக செல்லலாம். மங்கலம் சாலையிலிருந்து அவினாசி வழியாக செல்லும் வாகனங்கள் அணைப்பாளையம் பிரிவு, அணைப்பாளையம், சலவைப்பட்டறை, சிறுபூலுவபட்டி வழியாக அவினாசி செல்லலாம். தாராபுரம் சாலையிலிருந்து அவினாசி வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் கோவில்வழி, அமராவதிபாளையம், காங்கயம் ரோடு வழியாக நல்லூர், காசிபாளையம் சோதனைசாவடி, கூலிபாளையம் நால்ரோடு, பூண்டி ரிங்ரோடு வழியாக செல்லலாம்" என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 79வது சுதந்திர தின விழா ஒத்திகை.. சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share