பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு..!!
காரியாப்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் பட்டாசு தயாரிப்பதற்கு பெயர் பெற்ற விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, சாத்தூர், மற்றும் அருப்புக்கோட்டை போன்ற பகுதிகளில் பட்டாசு உற்பத்தி ஒரு முக்கிய தொழிலாக விளங்குகிறது. இந்தியாவின் பட்டாசு தேவையில் கணிசமான பங்கு இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இந்தத் தொழில் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் அதே வேளையில், அடிக்கடி நிகழும் வெடி விபத்துகள் தொழிலாளர்களின் உயிர்களைப் பறிப்பதோடு, பல குடும்பங்களைப் பேரழிவில் ஆழ்த்தி வருகின்றன.
இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மூலம் ஆண்டிற்கு 6,000 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. எவ்வளவு வருமானம் இருக்கிறதோ அவ்வளவு ஆபத்தும் இந்த தொழிலில் இருக்கிறது. இப்படி ஜனவரி மாதத்தில் இருந்து ஜூலை வரை 7 மாதங்களாக அடுத்தடுத்து தொடர்ச்சியாக பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தொடரும் பட்டாசு ஆலை விபத்துகள்.. நிரந்தர தீர்வு வேண்டும்.. தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே, வடகரையில் செயல்பட்டு வரும் ராஜா சந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி எதிர்பாராத விதமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் கருப்பையா, சவுண்டம்மாள் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த வெடி விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பட்டாசு ஆலையின் மேற்பார்வையாளர், போர்மேன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசன் சில நாட்களுக்கு முன்பு உயிரிழக்க, பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முருகன் என்பவர் இன்று உயிரிழந்தார். ஏற்கனவே கருப்பையா, சவுண்டம்மாள், கணேசன், பேச்சியம்மாள் ஆகியோர் உயிரிழந்த நிலையில், இன்று முருகன் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: பட்டாசு ஆலையில் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு.. தமிழக அரசிடம் ஜி.கே வாசன் வலியுறுத்துவது என்ன..?