ஊரையே அதிர வைத்த வெடி சத்தம்... துண்டு துண்டாய் சிதைந்த உயிர்... விருதுநகரில் அரங்கேறிய பயங்கரம்...!
விருதுநகர் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் ஒட்டையால் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பட்டாசுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறி வருவதால், மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒட்டையால் கிராமத்தில், மல்லாங்கிணறு பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மற்றும் ஜெயசக்தி ஆகியோருக்குச் சொந்தமான சின்னத்தம்பி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிவகாசி பட்டாசு ஆலைகளில் தொடர் விபத்து... சாட்டையைச் சுழற்றிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...!
இந்தப் பட்டாசு ஆலை மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பட்டாசு ஆலையில் ஐந்துக்கும் மேற்பட்ட அறைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இன்று அதிகாலை பட்டாசு தயாரிக்கும் பணிக்காக மருந்துக் கலவை தயார் செய்யும் பணியில், மீனம்பட்டியைச் சேர்ந்த மாடசாமி என்பவர் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது பட்டாசு மருந்துக் கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், மருந்துக் கலவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாடசாமியைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து சிதறி வருவதால், மீட்புப் பணியிலும், காணாமல் போனவரைத் தேடும் பணியிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இந்த வெடி விபத்து குறித்து சாத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் ‘திடுக்’ திருப்பம்... வெளியானது விபத்துக்கான முக்கிய காரணம்... ஹைஅலர்ட்டில் போலீஸ்...!