விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி என் மகனை விட்டுச் செல்கிறேன்... பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!
விருதுநகரில் விஜயபிரபாகரனை ஆதரித்து அல்லம்பட்டி வாட்டர் டேங் அருகே பரப்புரை மேற்கொண்ட பிரேமலதா விஜயகாந்த் விஜய பிரபாகரனின் அம்மாவான நான் விருதுநகரில் உள்ள அம்மாக்களை நம்பி ஒப்படைக்கிறேன் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.
விருதுநகரில் விஜயபிரபாகரனை ஆதரித்து அல்லம்பட்டி வாட்டர் டேங் அருகே பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: விருதுநகர் மண்ணின் மைந்தமான விஜய பிரபாகரனுக்கு வாக்கு சேகரிப்பதற்காக இங்கு வந்துள்ளேன். மக்களுக்கான நலத்திட்டங்களை கடந்த முறை எம்எல்ஏ சீனிவாசன் செய்திருக்கிறார். விஜய பிரபாகரன் வெற்றி பெற்று வந்தால் கவுசிகா மகாநதிக்கு மேல் நகர் பகுதியில் உயர்மட்ட பாலம். சாத்தூர் செல்லும் நான்கு வழி பாதை. புல்லலக்கோட்டை இணைப்பு சாலை.விருதுகள் அரசு கலை அறிவியல் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி போன்ற கோரிக்கைகள் ஏராளம் இங்கு இருக்கின்றன. அதை விஜய பிரபாகரன் செய்து தருவார்.
விருதுநகர் மாவட்டம் தான் விஜயகாந்த்க்கு பூர்வீகமான ஊர். ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் விஜயபிரபாகரனுக்கு அனேக ஓட்டுகளை செலுத்தி இருக்கிறீர்கள். அதே அன்போடு இந்த முறையும் அவருக்கு வாக்குகளை செலுத்துவீர்கள் என நம்புகிறேன். இந்த முறை வாக்குறுதிகளை திமுக அள்ளித் தந்திருக்கிறது 8000 கூப்பன், சுய உதவி குழுவிற்கு 5 லட்சம் கடனுதவி, காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் இதை அனைத்தையும் வெற்றிக்குப் பிறகு வழங்கவும் செய்வார்கள்.
விருதாச்சலம் மற்றும் சேலத்தில் ஸ்டாலின் தலைமையில் நடந்த பெண்களுக்கான மாபெரும் கூட்டத்தில் பங்கேற்று விட்டு இன்று விருதுநகர் வந்திருக்கிறேன். எத்தனை முனை போட்டியிருந்தாலும் மக்கள் விருப்பம் இந்த மத சார்பற்ற வெற்றி கூட்டணி ஆட்சி அமைக்கும் மீண்டும் ஸ்டாலின் தான் முதலமைச்சராக அமர்வார். ஏழாவது முறையாக திமுக ஆட்சி அமைக்கும்.
இதையும் படிங்க: சேலத்தில் பிரம்மாண்டமான ‘இந்தியா’ கூட்டணி சாலைவலம்! ஸ்டாலின், கமல், பிரேமலதா ஒன்றாக நடைபயணம்!
வெற்றிக் கூட்டணியில் மக்கள் இருந்தால்தான் அரசாங்கம் வழங்கும் சலுகைகளை உங்களுக்கு வழங்க முடியும். வெற்றி பெற்ற பின் விஜய பிரபாகரன் நேரில் வந்து உங்களிடமே அந்த திட்டங்களை வழங்குவார். 8000 ரூபாய் டோக்கனை வைத்து என்ன என்ன வாங்க வேண்டும் என சிந்தித்து வைத்துக் கொள்ளுங்கள். மே நான்காம் தேதி தேர்தல் முடிவு வந்தவுடன் விருதுநகருக்கு விஜய பிரபாகரன் வந்து இங்கேயே தங்கி விடுவார்.
எதிர்க்கட்சிகள் பயமுறுத்துவார்கள். அவர் சென்னையில் இருப்பார் என்று ஆனால்
விருதுநகர் வீடு எடுத்து இங்கேயே தங்கி விடுவார், சென்னையில் வேலை இருந்தால் சென்னைக்கு வந்துவிட்டு மீண்டும் விருதுநகர் பிள்ளையாக விருதுநகருக்கு வந்து விடுவார். இங்கிருந்து விருதுநகர் தொகுதியை முன்னேற்றுவதற்கான அனைத்து பணிகளையும் விஜய பிரபாகரன் மேற்கொள்வார்.
விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் பெண்களுக்கும் என அதிக திட்டங்கள் வைத்திருக்கிறோம். திமுக அறிவித்த வாக்குறுதி தவிர தேமுதிக வாக்குறுதிகள் விஜயகாந்த் வாக்குறுதிகளாக வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள், கம்ப்யூட்டர் பயிற்சிகள், மருத்துவ காப்பீடுகள் என பல்வேறு திட்டங்களை தர இருக்கிறோம். நீங்கள் தரும் வெற்றி மீண்டும் உங்களுக்காக உழைப்பதற்காக இந்த இளைஞன் விஜயபிரபாகரன் தயாராக இருக்கிறான்.
நாளை ஒரு நாள் மட்டுமே விஜயபிரபாகரனுக்காக இங்கு பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன். அதற்கு பின்பு விருத்தாச்சலம் செல்கிறேன். விருதுநகரில் இருக்க கூடிய அம்மாக்களை நம்பி நான் விஜய பிரபாகரனை கொடுத்துச் செல்லலாமா. உங்களை நம்பி நான் எனது மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையும் படிங்க: "முரசு கொட்டட்டும்.. ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!" - தேமுதிக பிரசார பாடலை வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த்...!