×
 

தமிழகத்தின் தீர்ப்பு ஆரம்பம்... சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி தொடங்கியது... கோட்டையை பிடிக்கப்போவது யார்?

வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் பதிவான வாக்குகளை என்ணும் பணி தற்போது தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 17ஆவது சட்டசபை தேர்தல் கடந்த 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. கடந்த முறையைக் காட்டிலும் அதிகமாக தமிழகத்தில் 85 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும், இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 

இந்நிலையில், வாக்குப்பதிவு முடிந்ததும், 5 ஆயிரத்து 64 வாக்குச் சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு அந்தந்த மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு இருந்தன. இன்று (மே 04ந் தேதி) அந்த வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. மேலும், இன்றைய தினமே முடிவுகள் வெளியாக உள்ளது.

 முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது. தபால் வாக்குகளை எண்ணுவதற்கு, ஒவ்வொரு 500 வாக்குகளுக்கும் ஒரு வாக்கு எண்ணும் மேஜை அமைக்கப்பட்டுள்ளது. வந்துள்ள தபால் வாக்குகள் அனைத்தும் பிரிக்கப்பட்டு செல்லுபடியாகும் வாக்குகள், செல்லுபடியாகாத வாக்குகள் என வகைப்படுத்தப்படும். அரை மணி நேரம் இந்த வாக்குகள் எண்ணி முடிக்கப்படும். இந்த தேர்தலில் மொத்தம் 4.61 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியிருந்ததாக சொல்லப்படுகிறது. இதில் 2.88 லட்சம் வாக்குகள் தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுடையது. 85 வயதுக்கும் மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் என 1.73 லட்சம் பேர் வாக்களித்தனர், 1.10 லட்சம் அலுவலர்கள் வாக்குச்சாவடிகளில் நேரடியாக வாக்களித்துள்ளனர். தேர்தல் வெற்றியில் தபால் வாக்குகள் எப்போதுமே பெரும் பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: விஜய்யின் முகம் பொறித்த சர்ட்..!! வெளியில் அனுப்பப்பட்ட தவெக ஏஜென்ட்..!! நாகையில் பரபரப்பு..!!

ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும் வாக்கு எண்ணும் பணியானது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் உதவியுடன் மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மொத்தம் 10,545 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் செயல்முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்வதற்காக 4,624 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், வாக்கு எண்ணும் நடவடிக்கைகளை மேற்பார்வையிடவும், ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒருவர் என மொத்தம் 234 வாக்கு எண்ணும் பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. 

பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக, உள்ளூர் காவல் துறை மற்றும் மாநில ஆயுதப் படையினருடன் கூடுதலாக, மத்திய ஆயுத காவல் படையின் 65 கம்பெனிகள் வாக்கு எண்ணும் மையங்களில் நிறுத்தப்பட்டு உள்ளனர். இந்த வாக்கு எண்ணும் மையங்களுக்குள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ புகைப்பட அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கும் வகையில் கடுமையான கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, அடையாள அட்டை இன்றி எவரும் மையத்தின் உள்ளே நுழைய அனுமதியில்லை என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மேலும், வாக்கு எண்ணும் கூடத்தின் உள்ளே பாதுகாப்பைக் கருதி செல்போன் கொண்டு செல்லக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்தல் பார்வையாளர்களை தவிர வேறு யாரும் வாக்கு எண்ணும் கூடத்திற்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 

இதையும் படிங்க: பரபரக்கும் அரசியல் களம்: 5 மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்..?? நாடே உற்றுப்பார்க்கும் தருணம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share