×
 

குடும்ப பிரச்சினை முடிவுக்கு வந்தது; இனி இருவரும் இணைந்தே பயணிப்போம்! டிடிவி தினகரன் நெகிழ்ச்சி!

பழைய சங்கடங்களை மறந்து பார்த்தவுடனேயே ஒன்று சேர்ந்துவிட்டோம்; இனி இருவரும் ஒன்றாகவே பயணித்துப் பிரசாரம் செய்வோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுராந்தகத்தில் இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசியலில் ஒரு முக்கிய வரலாற்றுப் பதிவாக மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் நிலவி வந்த கசப்பான மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நாங்கள் இருவரும் பார்த்ததும் ஒன்று சேர்ந்துவிட்டோம்; இனி ஒன்றாகவே பிரச்சாரம் செய்வோம் என அவர் அதிரடியாக அறிவித்தார்.

மேடையில் பேசிய டிடிவி தினகரன், தங்களுக்குள் இருந்த இடைவெளி குறித்து ஒளிவுமறைவின்றிப் பேசினார். "எங்களுக்குள் குடும்பப் பிரச்சினை, கட்சிப் பிரச்சினை இருந்தது உண்மைதான். பிரிந்து இருந்தோம், மன சங்கடங்கள் இருந்தது என்பதும் உண்மைதான். ஆனால், ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பார்கள்; அதற்கேற்ப இன்று வசந்த பஞ்சமி நன்னாளில் இந்தப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் நன்மைக்காகவும், குடும்ப ஆட்சியை அகற்றுவதற்காகவும் பழைய சண்டை சச்சரவுகளை மறந்து நாங்கள் கைகோர்த்துள்ளோம்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழ்நாடு தலைவராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் எடப்பாடி பழனிசாமியை முழுமனதோடு ஏற்றுக் கொண்டுள்ளோம் எனத் தினகரன் பிரகடனம் செய்தார். "நாங்கள் எல்லாம் புரட்சித் தலைவி அம்மாவின் தொண்டர்கள், புரட்சித் தலைவரின் வழிவந்தவர்கள் என்பதை எதிரிகள் மறந்துவிட்டார்கள். எங்களைப் பிரிக்க நினைத்தவர்களின் கனவு பலிக்காது. இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்தக் கூட்டணியில் இணைய நான் ஒப்புக்கொண்டுவிட்டேன்" என்றும் அவர் ரகசியத்தை உடைத்தார்.

தொடர்ந்து மூன்று முறை இந்தியாவின் பிரதமராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தியாவை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றவர் பிரதமர் மோடி என்று புகழாரம் சூட்டிய தினகரன், தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு உண்மையான மக்களாட்சியை அமைக்கப் பிரதமரின் அழைப்பை ஏற்று இக்கூட்டணியில் இணைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். எங்கள் இருவரது பயணமும் இனி ஒன்றாக இருக்கும், ஒட்டுமொத்தமாகத் தேர்தல் களத்தைச் சந்திப்போம் என்ற அவரது முழக்கம், அங்குத் திரண்டிருந்த அதிமுக மற்றும் அமமுக தொண்டர்களிடையே பெரும் உற்சாக அலைகளை ஏற்படுத்தியது.

 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share