மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் டிரம்ப்..!! அனைத்து நாடுகளுக்கும் தற்காலிகமாக 10% வரி..!! அதிரடி அறிவிப்பு..!!
அரசியலமைப்பு சட்டம் 122-ன் கீழ் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் தற்காலிகமாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த பரஸ்பர வரிகள் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட நிலையில், அவர் உடனடியாக புதிய உலகளாவிய 10 சதவீத வரி விதிப்பை அறிவித்துள்ளார். இது தற்காலிக நடவடிக்கையாக இருந்தாலும், உலக வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், டிரம்ப் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் பல நாடுகள் – இந்தியா, சீனா உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்டவை – மீது பரஸ்பர வரிகளை விதித்திருந்தார். அமெரிக்கா மீது அந்நாடுகள் அதிக வரிகள் விதிப்பதாகக் குற்றம்சாட்டி, 1977-ஆம் ஆண்டு சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் (IEEPA) கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். இதனால், அமெரிக்க இறக்குமதிகளுக்கு பல்வேறு விகிதங்களில் வரிகள் அமல்படுத்தப்பட்டன.
இந்த வரி நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சி உள்ளிட்ட பல தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்த இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 6-3 என்ற பெரும்பான்மை தீர்ப்பில், வரி விதிக்கும் அதிகாரம் அமெரிக்க அரசமைப்புச் சட்டப்படி பாராளுமன்றத்துக்கே உரியது என்று தெளிவாகக் கூறப்பட்டது. IEEPA சட்டம் வரிகளை விதிக்க அதிகாரம் அளிக்கவில்லை என்பதால், டிரம்ப் விதித்த பரஸ்பர வரிகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஒபாமா தம்பதியை கேலி செய்து வீடியோ..!! நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்..!! அடம்பிடிக்கும் டிரம்ப்..!!
மூன்று நீதிபதிகள் மட்டுமே டிரம்ப் நடவடிக்கை சட்டபூர்வமானது என்று கருத்து தெரிவித்தனர். இத்தீர்ப்பு டிரம்ப் நிர்வாகத்துக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. உடனடியாக அதிருப்தி தெரிவித்த டிரம்ப், மாற்று வழியில் வரி விதிப்பைத் தொடர முடிவு செய்தார். அரசியலமைப்பு சட்டத்தின் 1974 வர்த்தகச் சட்டம் பிரிவு 122-ன் கீழ், அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளின் இறக்குமதிகளுக்கும் தற்காலிகமாக 10 சதவீத உலகளாவிய வரி விதிக்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவில் அவர் கையெழுத்திட்டதாகவும், இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தனது சமூக வலைதளத்தில் அறிவித்தார். இப்புதிய வரி வருகிற 24-ஆம் தேதி முதல் செயல்படும். இது 150 நாட்கள் வரை மட்டுமே அமலில் இருக்கும்; அதன்பின் தொடர வேண்டுமானால் பாராளுமன்ற ஒப்புதல் தேவை. சில கனிமங்கள், இயற்கை வளங்கள், உரங்கள், ஆரஞ்சு, மாட்டிறைச்சி, சில மருந்துகள், மின்னணு பொருட்கள் மற்றும் வாகனங்கள் போன்றவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முன்பு விதிக்கப்பட்டிருந்த பிரிவு 232 மற்றும் 301-ன் கீழான வரிகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளுக்கு இது சில நிவாரணத்தை அளிக்கிறது. முன்பு 18 சதவீதமாக இருந்த வரி இப்போது 10 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் இது தற்காலிகமானது மட்டுமே. வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்னர், ஒப்புக்கொள்ளப்பட்ட வரி விகிதங்கள் அமல்படுத்தப்படும் என வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் நிர்வாகம், அமெரிக்காவுக்கு எதிராக நியாயமற்ற வரிகள் விதிக்கும் நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடரும் என்று வலியுறுத்தியுள்ளது. பாராளுமன்றத்தின் அதிகாரத்தை மதிக்கும் அதே வேளையில், வர்த்தக சமநிலையை உறுதி செய்ய மாற்று சட்ட வழிகளைப் பயன்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், உலக நாடுகள் இப்புதிய வரி நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இதையும் படிங்க: ஐ.நா எனக்கு உதவவில்லை..!! ஏப்ரலில் சீனா செல்கிறேன்..!! அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு பேச்சு..!!