ஆந்திராவில் கனக துர்க்கை கோயிலில் தரிசனம் செய்யும் சி.எம். விஜய்... அந்த அம்மனுக்கு இவ்வளவு பவரா?
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற கனகதுர்கை அம்மன் கோயிலில் முதலமைச்சர் விஜய் இன்று சுவாமி தரிசனம் மேற்கொள்ள இருக்கிறார்.
! ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அமைந்துள்ள கனகதுர்கை அம்மன் கோயில் உலகப் புகழ்பெற்ற கோயிலாகும். நம்முடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், மதுரை மீனாட்சி அம்மன், காசி விசாலாட்சி அம்மன் ஆகியோரைப் போலவே விஜயவாடா கனகதுர்கை அம்மனும் மிகவும் பிரசித்தி பெற்றவர்.
பொதுவாக, துர்கை அம்மனை வழிபடுவதற்கான காரணம் என்னவென்றால், மனிதர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் தெய்வமாகப் பெண் தெய்வங்களில் துர்கை அம்மன் போற்றப்படுகிறார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் தனது ஆட்சிப் பிரதேசத்தைச் சுற்றி எட்டு எல்லைகளிலும், அதாவது எட்டுத் திசைகளிலும் துர்கை அம்மனைப் பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முதல்வர் விஜயின் ஆந்திரா விசிட்..! எகிறும் எதிர்பார்ப்பு..! பயணத்திட்டம் வெளியீடு..!!
அதேபோல, விஜயவாடாவில் துர்கை அம்மன் அசுரர்களைச் சம்ஹாரம் செய்துவிட்டு, மிகவும் பிரசித்தி பெற்ற கிருஷ்ணா நதிக்கு அருகில் அமைந்துள்ள இந்திரநீலாத்ரி என்ற மலைத்தொடரின் அடிவாரத்தில் அருள்பாலிக்கிறார். இந்த மலைப்பகுதியில்தான் புகழ்பெற்ற கனகதுர்கை அம்மன் கோயில் அமைந்துள்ளது.
ஒரு கோயிலின் சிறப்பைப் பற்றிப் பேசும்போது, அதன் பழமையையும் நாம் கவனிப்போம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்த கோயில்கள் என்றால், அவற்றின் தொன்மையை நினைத்து வியப்படைவோம்.
அந்த வகையில், விஜயவாடா கனகதுர்கை அம்மன் கோயிலில் அகத்தியர், பரசுராமர், பரத்வாஜர், பஞ்சபாண்டவர்கள், கிருஷ்ணர், ஆதிசங்கரர் எனப் பலரும் பல்வேறு காலகட்டங்களில் தரிசனம் செய்ததாக நம்பப்படுகிறது.
தற்போது நவராத்திரி காலம் நடைபெற்று வருகிறது. இந்தக் காலகட்டத்தில் விஜயவாடா கனகதுர்கை அம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு நாளும் சுமார் 60,000 முதல் 70,000 பேர் வரை தரிசனம் செய்வதாகக் கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட சிறப்புமிக்க கோயிலில் நவராத்திரி காலத்தில் தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது.
அசுரர்களைச் சம்ஹாரம் செய்த பின்னர், துர்கை அம்மன் இந்தத் தலத்தில் சாந்தமான திருக்கோலத்தில் காட்சியளிப்பதாக நம்பப்படுகிறது. எதிரிகளை அழித்து, தீய சக்திகளை ஒழிக்கக்கூடிய தெய்வமாகத் துர்கை அம்மன் போற்றப்படுகிறார்.
நவராத்திரி காலத்தில் இந்தத் தேவியை வழிபட்டால், எதிரிகளால் ஏற்படும் அச்சம் மற்றும் பகைவர்களால் உண்டாகும் தொல்லைகள் நீங்கும் என்று இந்தத் தலபுராணத்தில் கூறப்படுகிறது.
தீயவர்களை அழிப்பதே தெய்வங்களின் பணியாகக் கருதப்படுகிறது. உதாரணமாக, முருகப்பெருமான் திருச்செந்தூரில் சூரனைச் சம்ஹாரம் செய்தார். அதேபோல, அசுரர்களை அழித்த துர்கை அம்மன் எட்டு கரங்களில் எட்டு ஆயுதங்களை ஏந்தியவாறு காட்சியளிக்கிறார்.
ஆயுதங்களைப் பார்த்தால் பொதுவாக நமக்குப் பயம் ஏற்படலாம். ஆனால், இந்தத் துர்கை அம்மன் அசுரர்களை அழித்த பின்னரும் தனது கரங்களில் ஆயுதங்களை ஏந்தியபடி மிகவும் சாந்தமான சொரூபத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார்.
இதனால்தான் விஜயவாடாவுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் மலையடிவாரத்தில் அமைந்துள்ள கிருஷ்ணா நதியில் நீராடிவிட்டு, கனகதுர்கை அம்மனை வழிபடுகின்றனர்.
இந்தக் கோயிலின் மற்றொரு சிறப்பு ஸ்ரீசக்கரப் பிரதிஷ்டை ஆகும். பொதுவாக, அம்பாள் கோயில்களில் ஸ்ரீசக்கரத்தை மேரு வடிவில் வைத்து வழிபடுவது ஒரு முக்கியமான வழிபாட்டு முறையாகும். ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கோயில்களுக்குத் தனிச்சிறப்பு உண்டு என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஸ்ரீசக்கரம் இருப்பதைப் போலவே, விஜயவாடா கனகதுர்கை அம்மன் கோயிலிலும் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோயிலின் நான்கு புறங்களிலும் ஸ்ரீசக்கரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்ததாக நம்பப்படுகிறது.
இந்தக் கோயிலின் பெருமைகளும் சிறப்புகளும் ஏராளம். பொதுவாக, அம்பாள் கோயில்களில் சிவபெருமானுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். அதேபோல, இந்த மலைக்கு அருகிலுள்ள மற்றொரு குன்றில் மல்லேஸ்வர சுவாமி லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார்.
தமிழகக் கோயில்களில் பிள்ளையார் சன்னதி, வள்ளி-தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான் சன்னதி, நடராஜர் சன்னதி, சிவகாமி அம்மன் சன்னதி போன்றவற்றைக் காண்பதுபோல, இந்தக் கனகதுர்கை அம்மன் கோயிலிலும் பல்வேறு தெய்வங்களுக்கான சன்னதிகள் அமைந்துள்ளன.
பொதுவாக, நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கை அம்மன் வழிபாட்டுக்கு உரியவையாகக் கருதப்படுகின்றன. இந்த நாட்களில் துர்கை அம்மனை, குறிப்பாக விஜயவாடா கனகதுர்கை அம்மனைத் தரிசிப்பது மிகவும் சிறப்பானதாக நம்பப்படுகிறது.
எதிரிகளால் ஏற்படும் அச்சம் நீங்கி, அனைவருக்கும் நன்மை அளிக்கக்கூடிய தேவியாகக் கனகதுர்கை அம்மன் போற்றப்படுகிறார். எதிரிகளை வீழ்த்தவும், தொட்ட காரியங்களில் இமாலய வெற்றி பெறவும் இந்த அன்னைக்குச் 'சண்டி யாகம்' செய்து வழிபடுவது அரசியல்வாதிகளின் வழக்கம். அதேபோல், மகாபாரதத்தில் அர்ஜுனன் சிவபெருமானை நோக்கித் தவம் செய்து பாசுபதாஸ்திரம் என்ற அஸ்திரத்தைப் பெற்றதும் இதே இந்திரகீலாத்ரி மலையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, தன் வாழ்வின் அடுத்தடுத்த வெற்றிகளுக்காக இந்த 'வெற்றி தரும் அன்னை' கனக துர்காவை விஜய் சரணடையப் போவதாக சிலிர்ப்போடு பேசுகின்றனர்.
இதையும் படிங்க: ரூ.300 கோடியில் பிரம்மாண்டம்..! "பெரியார் அறிவுலகம்".! திறந்து வைக்கும் முதல்வர் விஜய்..!