அம்பத்தூர் Capitaland திறப்பு விழாவில் விஜய் உருட்டிய அன்னாசி பழம்!! பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய கதை என்ன?
இது வெறும் சடங்கல்ல; ஹோக்கியன் மொழியில் அன்னாசி “ஓங் லாய்” (Ong Lai) என அழைக்கப்படுகிறது.
சென்னை அம்பத்தூர் பட்டரைவாக்கத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த கேபிட்டல் லேண்ட் (CapitaLand) நிறுவனத்தின் நவீன தரவு மையம் இன்று முறையாகத் திறந்து வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் சிங்கப்பூர் துணைப் பிரதமரும் வர்த்தக-தொழில்துறை அமைச்சருமான கான் கிம் யோங் ஆகியோர் இணைந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக அரசுடன் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான இந்த திட்டம், சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஏழு அடுக்கு மாடிக் கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள இதில் சுமார் 4,900 சர்வர் ரேக்குகள் இடம்பெற்றுள்ளன.
முழுமையாக இயங்கும்போது 34 முதல் 55 மெகாவாட் வரையிலான திறன் கொண்டதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது சென்னையின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது. முழு அளவில் செயல்படும்போது ஆயிரக்கணக்கானோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய் பட்டு வேட்டி, சட்டை அணியக் காரணம் இதுதானாம்..!! செங்கோட்டையன் சொன்ன சுவாரசிய தகவல்!!
விழாவின் சிறப்பம்சமாக சிங்கப்பூர் பாரம்பரிய சடங்கு இடம்பெற்றது. முதல்வர் விஜய் மற்றும் துணைப் பிரதமர் கான் கிம் யோங் இருவருக்கும் அன்னாசிப் பழங்கள் வழங்கப்பட்டு, அவற்றை உள்ளே உருட்டி விடச் சொல்லப்பட்டது. இது வெறும் சடங்கல்ல; ஹோக்கியன் மொழியில் அன்னாசி “ஓங் லாய்” (Ong Lai) என அழைக்கப்படுகிறது.
இது “அதிர்ஷ்டம் வருகிறது”, “செல்வம் பெருகுகிறது” என்ற பொருளைத் தரும். புதிய வீடு, அலுவலகம் அல்லது நிறுவனம் தொடங்கும்போது வாசலில் இருந்து உள்ளே அன்னாசியை உருட்டி “ஹுவாட் அ!” என்று கூறுவது சிங்கப்பூர், மலேசியாவில் பரவலான வழக்கம். இதன் மூலம் புதிய தொடக்கம் செழிப்பாக அமையட்டும் என்ற நம்பிக்கை வெளிப்படுத்தப்படுகிறது.
இதேபோல் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் புதிய தொடக்கங்களுக்குத் தனித்தனி நம்பிக்கைகள் உள்ளன. சீனாவில் அன்னாசியுடன் ஆரஞ்சு, மாதுளை போன்ற பழங்களையும் நாணயங்களையும் பயன்படுத்துவர். ரஷ்யாவில் புதிய வீட்டிற்குள் முதலில் பூனையை அனுப்பி வைப்பர். பிலிப்பைன்ஸில் நாணயங்களை வீசுவர். இந்தியாவில் கிரகப்பிரவேசத்தின் போது பசுவையும் கன்றையும் அழைத்துச் செல்வது லட்சுமி கடாட்சத்திற்கு அடையாளமாகக் கருதப்படுகிறது.
சிங்கப்பூர்-தமிழக பொருளாதார உறவுகளை மேலும் ஆழப்படுத்தும் இந்தத் தரவு மையம், இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பின் புதிய அத்தியாயமாக விளங்குகிறது.
இதையும் படிங்க: தவெகவில் விரிசலா? விஜய்யை விட்டு விலகும் நாஞ்சில் சம்பத்.. அதிருப்திக்கு காரணம் என்ன..??