×
 
☰

டிவியும் இல்லை, ஸ்மார்ட்போனும் இல்லை! மகள் தங்கம் வென்ற செய்தியை ரேஷன் கடையில் அறிந்த தாய்!

நீருவின் குடும்பம் எளிய பொருளாதார பின்னணியில் இருந்து வந்தது. சிறிய ஒரு அறை வீட்டில் வசிக்கும் குடும்பத்தின் வாழ்வாதாரம் எருமைப் பால் விற்பனை உள்ளிட்ட வருமானத்தை நம்பியுள்ளது.

ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை நீரு தண்டா வரலாற்று சாதனை படைத்துள்ளார். பெண்களுக்கான தனிநபர் டிராப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற அவர், இந்தப் பிரிவில் ஆசிய விளையாட்டில் தனிநபர் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஆனால், நீருவின் இந்த மகத்தான வெற்றிச் செய்தி அவரது தாயார் சுதேஷ் தேவிக்கு தொலைக்காட்சி அல்லது இணையம் மூலம் தெரியவில்லை. ஹரியானாவின் ஜிந்த் மாவட்டம் சங்கத்புரா கிராமத்தில் வசிக்கும் சுதேஷ் தேவி, ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக கடைக்குச் சென்றபோது, அவரது செல்போனுக்கு அறிமுகமில்லாத எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது.

அழைப்பில் பேசிய ஒருவர், “நீரு ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றுவிட்டார்” என்று தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட சுதேஷ் தேவி ஒரு கணம் நம்ப முடியாமல் நின்றுள்ளார். செய்தி உண்மையா என்பதை உறுதி செய்ய அருகில் இருந்தவர்களிடம் விசாரித்த பிறகே, தனது மகள் சாதித்ததை அறிந்துள்ளார். பின்னர் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொண்டு அவசரமாக வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

இதையும் படிங்க: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 5-வது தங்கம்! துப்பாக்கி சுடுதலில் வரலாறு படைத்தார் நீரு தண்டா!

“எங்களிடம் டிவி இல்லை. ஸ்மார்ட்போனும் இல்லை. போட்டி நடக்க இருப்பது மட்டும் தெரியும். தங்கம் வென்ற செய்தியை போன் மூலம் தான் தெரிந்து கொண்டேன். நீரு தங்கம் வென்றதை இன்னும் முழுமையாக நம்ப முடியவில்லை” என்று சுதேஷ் தேவி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஜிந்த் பகுதியைச் சேர்ந்த நீருவின் குடும்பம் எளிய பொருளாதார பின்னணியில் இருந்து வந்தது. சிறிய ஒரு அறை வீட்டில் வசிக்கும் குடும்பத்தின் வாழ்வாதாரம் எருமைப் பால் விற்பனை உள்ளிட்ட வருமானத்தை நம்பியுள்ளது. குறைந்த வசதிகளுக்கு மத்தியிலும் நீரு தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு சர்வதேச அளவில் சாதித்து வருகிறார்.

ஆசிய விளையாட்டில் 28 புள்ளிகளுடன் தங்கம் வென்ற நீரு, புதிய ஆசிய சாதனையையும் படைத்துள்ளார். 1978-ல் ஆண்கள் டிராப் பிரிவில் ரந்தீர் சிங் தங்கம் வென்ற பிறகு, இந்தப் பிரிவில் இந்தியாவின் முதல் தனிநபர் தங்கமாகவும் இது அமைந்துள்ளது.

தனது வெற்றிக்குப் பிறகு பேசிய நீரு, இந்த தங்கப் பதக்கத்தை தனது தாயார் மற்றும் பயிற்சியாளருக்கு அர்ப்பணிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். தாயின் கண்களில் மகிழ்ச்சிக் கண்ணீரை வரவழைத்த இந்த தங்கம், இந்திய விளையாட்டு வரலாற்றிலும் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது.

இதையும் படிங்க: ஆசிய விளையாட்டில் அசத்தும் இந்தியா! இன்று ஒரேநாளில் 4 தங்கம்!! பதக்க பட்டியலில் அதிரடி முன்னேற்றம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share