திருமணமான 10 நாளில் சோகம்.. போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா விபத்தில் பலி..!
ஸ்பெயினின் ஜமோரா நகரில் நடந்த கார் விபத்தில் போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வா உயிரிழந்தனர்.
1996ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி போர்ச்சுகலில் உள்ள மாசாமாவில் பிறந்தார் டியோகோ ஜோட்டா (Diogo Jota) என்று அழைக்கப்படும் டியோகோ ஹோஸே டெய்ஷெய்ரா டா சில்வா (Diogo José Teixeira da Silva). போர்ச்சுகீசிய தொழில்முறை கால்பந்து வீரராக இருந்த இவர், லிவர்பூல் கால்பந்து கழகத்திற்காகவும், போர்ச்சுகல் தேசிய அணிக்காகவும் முன்னணி வீரராகவும் இடது விங்கராகவும் விளையாடினார். அவரது துல்லியமான கோல் அடிக்கும் திறன், வெடிப்பு வேகம் மற்றும் பந்து கட்டுப்பாட்டுத் திறன் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றவர்.
தனது கால்பந்து வாழ்க்கையை பாசோஸ் டி ஃபெரெய்ரா கழகத்தில் தொடங்கிய ஜோட்டா, பின்னர் 2016இல் அத்லெட்டிகோ மாட்ரிட் கழகத்தில் சேர்ந்தார். 2016இல் எஃப்சி போர்டோவிலும், 2017இல் வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ் (வோல்வ்ஸ்) அணியிலும் தற்காலிகமாக விளையாடினார். 2018இல் வோல்வ்ஸ் அணியில் நிரந்தரமாக இணைந்து, 131 போட்டிகளில் 44 கோல்கள் அடித்தார். மேலும் அணியை பிரீமியர் லீக்கிற்கு உயர்த்த உதவினார் ஜோட்டா.
இதையும் படிங்க: மனைவி மகளுக்கு மாதம் ரூ.4 லட்சம்.. முகமது ஷமிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு; பின்னணி என்ன?
தொடர்ந்து 2020இல் £41 மில்லியன் கட்டணத்தில் லிவர்பூலுக்கு மாறினார். அங்கு 123 போட்டிகளில் விளையாடி, முக்கியமான கோல்களை அடித்தார். மேலும் போர்ச்சுகல் தேசிய அணிக்காக 49 போட்டிகளில் விளையாடினார்
இந்நிலையில் ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே நடந்த கார் விபத்தில் டியோகோ ஜோட்டா (வயது 28) மற்றும் அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வா (26) ஆகியோர் உயிரிழந்தனர். அவர்கள் பயணித்த லம்போர்கினி காரின் டயர் வெடித்து தீப்பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் விபத்தில் உயிரிழந்த ஜோட்டாவிற்கு 10 நாட்களுக்குப் முன்பு தான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஜோட்டாவின் மறைவு கால்பந்து உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது ரசிகர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள கால்பந்து ஆர்வலர்கள் அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.