×
 

அமெரிக்காவில் களைகட்டிய கிராண்ட் செஸ் இறுதிச்சுற்று..!! கோலாகல தொடக்கம்..!!

ஒவ்வொரு அரை இறுதியும் 2 ஆட்டங்கள் கொண்டதாகும்.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் உள்ள பிரபல செயின்ட் லூயிஸ் செஸ் கிளப்பில் இன்று முதல் ஆகஸ்ட் 27 வரை நடைபெறும் 2026 கிராண்ட் செஸ் டூர் இறுதி சுற்று, உலக செஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. முழு தொடரின் முதல் ஐந்து கட்டப் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி டாப்-4 இடங்களைப் பிடித்த நான்கு கிராண்ட் மாஸ்டர்களே இந்த நொக்காவுட் வடிவ இறுதிப் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

தொடர் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியாவின் பிரக்ஞானந்தா (35.5 புள்ளிகள்), இரண்டாமிடத்தில் உள்ள அமெரிக்காவின் வெஸ்லி சோ (34.5), மூன்றாமிட ஃபேபியானோ கருணா (29.5) மற்றும் நான்காமிட ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் (28.5) ஆகியோரே இறுதி நான்கு வீரர்கள். தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா, சமீபத்தில் செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் கோப்பையை வென்று, சின்க்ஃபீல்டு கோப்பையில் இரண்டாமிடம் பெற்று தொடர் முன்னிலையை உறுதி செய்துள்ளார். இது அவரது இரண்டாவது தொடர்ச்சியான ஜிசிடி ஃபைனல்ஸ் பங்கேற்பு ஆகும்.

இறுதி சுற்றின் ஒரு அரைஇறுதியில் பிரக்ஞானந்தா, வின்சென்ட் கீமரை எதிர்கொள்கிறார். மற்றொரு அரைஇறுதியில் வெஸ்லி சோவும் ஃபேபியானோ கருணாவும் மோதுகின்றனர். ஒவ்வொரு ஆட்டத்திலும் இரண்டு கிளாசிக்கல், இரண்டு ரேபிட் மற்றும் நான்கு பிளிட்ஸ் ஆட்டங்கள் நடைபெறும். கிளாசிக்கல் ஆட்டத்தில் முதல் 40 நகர்வுகளுக்கு 90 நிமிடங்கள், அதற்குப் பிறகு 30 நிமிடங்கள் மற்றும் ஒவ்வொரு நகர்வுக்கும் 30 வினாடி கூடுதல் நேரம் வழங்கப்படும். ரேபிட் மற்றும் பிளிட்ஸ் ஆட்டங்களும் தனித்தனியான நேரக் கட்டுப்பாடுகளுடன் நடைபெறும். 

புள்ளிகள் கிளாசிக்கல், ரேபிட், பிளிட்ஸ் ஆகியவற்றுக்கு வேறுபட்ட முறையில் கணக்கிடப்படும். தேவைப்பட்டால் டைபிரேக்கர்கள் கடைபிடிக்கப்படும்.மொத்தப் பரிசுத் தொகை சுமார் ரூ.4.30 கோடி ($4,50,000). சாம்பியனுக்கு சுமார் ரூ.1.91 கோடி ($2,00,000), இரண்டாமிடத்துக்கு ரூ.1.19 கோடி ($1,25,000), மூன்றாமிடத்துக்கு $75,000 மற்றும் நான்காமிடத்துக்கு $50,000 வழங்கப்படும்.

மேலும் முதல் மூன்று இடங்களைப் பிடிப்போருக்கு 2027 கிராண்ட் செஸ் டூருக்கான அழைப்பும் கிடைக்கும். கிராண்ட் மாஸ்டர் யாசர் சீரவான் தலைமையில் நேரடி வர்ணனை யூடியூப் மற்றும் ட்விட்ச் சேனல்களில் கிடைக்கும். இந்திய செஸ் ரசிகர்கள் பிரக்ஞானந்தாவின் சாதனையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share