அடக்கொடுமையே... அப்பாவை அடுத்து இவருமா? - ஸ்மிருதி மந்தனாவின் வருங்கால கணவர் மருத்துவமனையில் அனுமதி...!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான ஸ்மிருதி மந்தனாவின் தந்தையைத் தொடர்ந்து அவரது வருங்கால கணவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான ஸ்மிருதி மந்தனாவின் தந்தையைத் தொடர்ந்து அவரது வருங்கால கணவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தூணாகத் திகழும் ஸ்மிருதி மந்தனா சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பையிலும் இந்தியா டிராபி வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். நீண்ட நாள் காதலரான பலாஷ் முச்சலை, ஸ்மிருதி மந்தனா திருமணம் செய்து கொள்ளப் போவதாக செய்தி வெளியானது. இதனையடுத்து திருமணம் சடங்குகள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பான புகைப்படங்கள் அடுத்தடுத்து இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தன.
திருமணம் திடீர் ரத்து:
இதனிடையே, ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் நேற்று (நவம்பர் 23) நடைபெறவிருந்தது. மகாராஷ்டிராவின் சாங்லியில் இந்த திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஹால்டி விழாவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இருப்பினும், முகூர்தத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதன் காரணமாக, ஸ்மிருதி மந்தனா மற்றும் பலாஷ் திருமணம் திடீரென ரத்து செய்யப்பட்டது.
இதையும் படிங்க: பிரபல இசையமைப்பாளரை கரம் பிடிக்கிறார் ஸ்மிருதி மந்தனா..!! அட இவரா..!!
மாலை 4:30 மணியளவில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், உணவு தயாரிக்கும் பணியை மேற்பார்வை செய்து கொண்டிருந்த ஸ்ரீனிவாஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தந்தை உடல் நலம் தேறி வரும் வரை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை ஸ்மிருதி மந்தனா அறிவித்தார்.
ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீநிவாஸ் மந்தனாவுக்கு, இடது பக்க மார்பு வலி ஏற்பட்டதால் காலை 11:30 மணியளவில் சாங்லியில் உள்ள சர்வித் மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பிபி சற்று உயர்ந்திருப்பதும், கார்டியாக் என்சைம்கள் சற்றே அதிகமாக இருப்பதும் கண்டறியப்பட்டது.
எக்கோ கார்டியோகிராமில் அவருக்கு எந்த சிக்கலும் இல்லை என்பது தெளிவாகியுள்ள நிலையில், அவருக்குத் தொடர்ச்சியான ECG கண்காணிப்பும், ஆஞ்சியோகிராஃபியும் தேவைப்படலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மகளின் திருமணம் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததால் ஏற்பட்ட உடல் மற்றும் மன அழுத்தமே நெஞ்சுவலி ஏற்பட காரணம் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஸ்மிருதி மந்தானாவின் குடும்ப மருத்துவர் நமன் ஷா, அவரது தந்தையின் உடல்நிலையை மருத்துவக் குழு கண்காணித்து வருவதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டால், அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறினார்.
மணமகன் மருத்துவமனையில் அனுமதி:
இதற்கிடையில், ஸ்மிருதியின் வருங்கால கணவர் பலாஷ் முச்சலின் உடல்நிலையும் மோசமடைந்ததால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைரஸ் தொற்று மற்றும் அசிடிட்டி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலாஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல் நார்மலாக இருப்பதாகவும், இன்றே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, திருமணம் திடீரென ரத்தானது என ஸ்மிருதி மந்தனா ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு அதிர்ச்சிகளை எதிர்கொண்டார். தற்போது ஸ்மிருதி மந்தனாவின் காதலரும், வருங்கால கணவருமான பலாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அவருக்கு ஆறுதலையும், தங்களது பிரார்த்தனைகளையும் சோசியல் மீடியா மூலமாக தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வரலாற்று சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா..!! சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசி அசத்தல்..!!