குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி! ஹைதராபாத்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம்!
ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குஜராத் டைட்டன்ஸ் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
ஐபிஎல் 2026 தொடரின் 55-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க வீரராகக் களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன் 44 பந்துகளில் 61 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 33 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து வலுவான அடித்தளம் அமைத்தார். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் தரப்பில் பிரபுல் ஹிங்கே மற்றும் சாகிப் ஹுசைன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. குஜராத் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஜேசன் ஹோல்டர் மற்றும் ககிசோ ரபாடாவின் துல்லியமான பந்துவீச்சில் ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் திணறினர். இவர்களின் வேகத்தில் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டாய் சரிந்தன. வெறும் 86 ரன்களுக்குச் சன்ரைசர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியைச் சந்தித்தது.
இதையும் படிங்க: அக்ஷர் படேல் - டேவிட் மில்லர் அதிரடி! பஞ்சாப்பை வீழ்த்தி டெல்லி ‘கேபிடல்ஸ்’ திரில் வெற்றி!
இரு அணிகளும் தங்களது முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் ‘டாப்’ இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
இதையும் படிங்க: சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அதிரடி: லக்னோவை வீழ்த்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி - உர்வில் படேல் விளாசல்!