×
 

'A MAN WITH A HEART'..!! ஹர்திக் பாண்டியாவின் அதிரடி மற்றும் மனிதநேயம்..!! ஐஸ்-பேக் வைத்து கேமராமேனை நெகிழ வைத்த சம்பவம்..!!

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியின் போது இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா அடித்த பந்து மைதானத்தில் இருந்த கேமராமேனின் தோள்பட்டையை தாக்கியது. ஆட்டம் முடிந்ததும் கேமராமேனிடம் வந்து ஆறுதல் தெரிவித்து நெகிழ வைத்தார் ஹர்த்திக் பாண்டியா.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 5வது மற்றும் இறுதி டி20 போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை 3-1 என கைப்பற்றியது. இப்போட்டியில் இந்தியாவின் ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா அதிரடியான ஆட்டத்துடன் மைதானத்தில் நெகிழ்ச்சியான தருணத்தையும் உருவாக்கினார்.

நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா கேப்டன் ஐடன் மார்க்ரம் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது. இதில் திலக் வர்மா 42 பந்துகளில் 73 ரன்களும், ஹார்திக் பாண்டியா 25 பந்துகளில் 63 ரன்களும் விளாசினர்.

ஹார்திக் பாண்டியா 13வது ஓவரில் களமிறங்கியதும் தனது முதல் பந்தையே கொர்பின் போஷ் வீசிய பந்தை நேராக லாங்-ஆஃப் திசையில் பலமாக அடித்தார். அந்த பந்து சிக்ஸராக பறந்து சென்று எல்லைக்கோட்டருகே நின்றிருந்த கேமராமேனின் இடது தோள்பட்டையில் பலமாக தாக்கியது. உடனடியாக ஆட்டம் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. இந்திய அணியின் பிசியோ கேமராமேனுக்கு சிகிச்சை அளித்து ஐஸ் பேக் வைத்தார். அதிர்ஷ்டவசமாக கேமராமேன் பெரிய காயமின்றி தொடர்ந்து பணியாற்றினார்.

https://twitter.com/i/status/2002066045159551243

ஹார்திக் பாண்டியா தனது அதிரடியை தொடர்ந்தார். வெறும் 16 பந்துகளில் அரைசதம் விளாசினார். இது இந்திய வீரர்களுக்கான இரண்டாவது வேகமான டி20 அரைசதம் ஆகும். மொத்தம் 5 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்து ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார். அவரது அதிரடியால் இந்தியா - திலக் வர்மாவுடன் சேர்ந்து 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இமாலய இலக்கை நிர்ணயித்தது.

பதிலுக்கு களமிறங்கிய தென்னாப்பிரிக்கா க்வின்டன் டி காக்கின் 65 ரன்கள் உதவியுடன் நன்றாக தொடங்கியது. ஆனால் வருண் சக்ரவர்த்தியின் 4 விக்கெட்டுகள் மற்றும் ஜஸ்பிரித் பும்ராவின் சிறப்பான பந்துவீச்சால் 201/8 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. போட்டி முடிந்ததும் ஹார்திக் பாண்டியா உடனடியாக கேமராமேனிடம் சென்று நலம் விசாரித்தார். காயம்பட்ட தோள்பட்டையை பார்த்து ஐஸ் பேக் வைத்து உதவி செய்தார். பின்னர் அவரை அரவணைத்து ஆறுதல் கூறினார். இந்த நெகிழ்ச்சியான காட்சி பிசிசிஐ வெளியிட்ட வீடியோவில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்தது.

பின்னர் பேட்டியில் ஹார்திக், "பந்து அவரது தலைக்கு மேலே செல்லாமல் தோளில் பட்டது அதிர்ஷ்டம். நான் மிகவும் பதறினேன். எனது 10-11 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் அவரை பார்த்திருக்கிறேன். மன்னிப்பு கேட்டு நலம் விசாரிக்க வேண்டும் என்று நினைத்தேன். அவர் நலமாக இருப்பதில் மகிழ்ச்சி" என்றார்.

இந்த சம்பவம் ஹார்திக் பாண்டியாவின் மைதானத்துக்குள் அதிரடி மற்றும் மைதானத்துக்கு வெளியே மனிதநேயத்தை வெளிப்படுத்தியது. ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரது செயலை பாராட்டி தள்ளினர். இந்திய அணி 2025ஆம் ஆண்டை தொடர் வெற்றியுடன் முடித்து, 2026 டி20 உலகக்கோப்பைக்கு தயாராகி வருகிறது.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share